மேல் சிகிச்சைக்காக எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு ஜனாதிபதி மாற்றப்பட்டார் - 30-ந் தேதி ‘பைபாஸ்’ அறுவை சிகிச்சை


மேல் சிகிச்சைக்காக எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு ஜனாதிபதி மாற்றப்பட்டார் - 30-ந் தேதி ‘பைபாஸ்’ அறுவை சிகிச்சை
x
தினத்தந்தி 27 March 2021 7:12 PM GMT (Updated: 27 March 2021 7:12 PM GMT)

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மேல் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு 30-ந் தேதி இதயத்தில் ‘பைபாஸ்’ அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர்.

புதுடெல்லி, 

75 வயதான ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு நேற்று முன்தினம் காலையில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இது குறித்து அறிந்ததும் உடனடியாக குடும்பத்தினர் அவரை டெல்லி ராணுவ ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றார்கள்.

அங்கு அவரை அனுமதித்து பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அதே நேரத்தில் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து மருத்துவ நிபுணர்கள் அவரை கண்காணித்து வந்தனர்.

வங்காளதேசம் சென்றுள்ள பிரதமர் மோடி, இது பற்றி தெரிய வந்தபோது, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் மகன் பிரசாந்த் குமார் கோவிந்தை செல்போனில் தொடர்பு கொண்டு, ஜனாதிபதியின் உடல்நலம் குறித்து விசாரித்து அறிந்தார்.

மேலும் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், ராணுவ ஆஸ்பத்திரிக்கு சென்று, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பார்த்தார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனைகள், சிகிச்சை தொடர்பாக டாக்டர்களிடம் கேட்டு அறிந்தார்.

இந்த நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கூடுதல் பரிசோதனைகளை நடத்தி, மேல் சிகிச்சையையும் அளிப்பதற்கு வசதியாக எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு மாற்றுவது என ராணுவ ஆஸ்பத்திரி மருத்துவ நிபுணர்கள் நேற்று முடிவு எடுத்தனர்.

அதன்படி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு பிற்பகலில் மாற்றப்பட்டார்.

அங்கு அவருக்கு இதயம் தொடர்பான கூடுதல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றின் முடிவுகளின் அடிப்படையில், ஜனாதிபதிக்கு இதயத்தில் ‘பைபாஸ்’ அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு எடுத்தனர். இதுகுறித்து ஜனாதிபதிக்கு தக்க அறிவுரையும் வழங்கினர்.

இந்த அறுவை சிகிச்சையை வரும் 30-ந் தேதி காலை நடத்துவதற்கு டாக்டர்கள் முடிவு செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

அதே நேரத்தில் ஜனாதிபதியின் உடல்நிலை தொடர்ந்து சீராக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

Next Story