வங்கப்புலி நான்; சிங்கம் போன்றும் பதிலடி கொடுப்பேன்: பிரசாரத்தில் மம்தா பானர்ஜி ஆவேசம்


வங்கப்புலி நான்; சிங்கம் போன்றும் பதிலடி கொடுப்பேன்: பிரசாரத்தில் மம்தா பானர்ஜி ஆவேசம்
x
தினத்தந்தி 29 March 2021 1:12 PM GMT (Updated: 29 March 2021 1:12 PM GMT)

பீகார், உத்தர பிரதேசத்தில் இருந்து ரவுடிகளை கொண்டு வந்து நந்திகிராமில் என் மீது தாக்குதல் நடத்துகிறார்கள் என மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

நந்திகிராம்,

294 இடங்களை கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு வரும் 27ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் 29ந்தேதி வரை 8 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.  மே 2ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.  முதற்கட்ட தேர்தல் நேற்று முன்தினம் நடந்து முடிந்துள்ளது.  இதில் 79 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

2வது கட்ட தேர்தல் ஏப்ரல் 1ந்தேதி 30 தொகுதிகளுக்கு நடைபெறுகிறது. இதில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியும் அடக்கம். அவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் சுவேந்து அதிகாரி களமிறங்கி உள்ளார்.  இதனால், நந்திகிராம் தொகுதி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலை முன்னிட்டு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மற்றும் முதல் மந்திரியான மம்தா பானர்ஜி தான் போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி இன்று பிரமாண்ட பேரணியில் கலந்து கொண்டார்.  அவர் நந்திகிராமில் பிரசாரம் மேற்கொண்டு பேசும்பொழுது, என் மீது அவர்கள் தாக்குதல் நடத்துகிறார்கள்.

நந்திகிராமில் உள்ள யாரும் என்னை தாக்கவில்லை. ஆனால், நீங்கள் பீகார் மற்றும் உத்தர பிரதேசத்தில் இருந்து ரவுடிகளை கொண்டு வந்து நந்திகிராமில் என் மீது தாக்குதல் நடத்துகிறீர்கள் என்று குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

தொடர்ந்து மம்தா பேசும்பொழுது, சுதந்திர மற்றும் வெளிப்படையான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.  அவர்கள் வந்தால், அவர்கள் மீது பெண்கள் பாத்திரங்களை கொண்டு அடிக்க வேண்டும்.  கலாசாரம் மீது அன்பு கொள்ளாதவர்கள் இங்கு அரசியல் செய்ய முடியாது.  நந்திகிராமில் ரவுடியிசம் காணப்படுகிறது.

நாங்கள் பைருலியாவில் கூட்டம் நடத்தினோம்.  திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது.  அவர் (சுவேந்து அதிகாரி) என்ன விரும்புகிறாரோ அதனை செய்து வருகிறார்.  என்னாலும் விளையாட்டுகளை விளையாட முடியும்.

நான் வங்கப்புலி.  என்னால் சிங்கம் போலவும் பதிலடி கொடுக்க முடியும் என்று மம்தா பானர்ஜி ஆவேசமுடன் பேசியுள்ளார்.


Next Story