குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு நடந்த பைபாஸ் அறுவை சிகிச்சை வெற்றி; மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தகவல்


குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு நடந்த பைபாஸ் அறுவை சிகிச்சை வெற்றி; மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தகவல்
x
தினத்தந்தி 30 March 2021 12:08 PM GMT (Updated: 30 March 2021 12:08 PM GMT)

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு நடந்த பைபாஸ் அறுவை சிகிச்சை வெற்றியடைந்து உள்ளது என மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இது குறித்து அறிந்ததும் உடனடியாக குடும்பத்தினர் அவரை டெல்லி ராணுவ ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றார்கள்.

அங்கு அவரை அனுமதித்து பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அதே நேரத்தில் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து மருத்துவ நிபுணர்கள் அவரை கண்காணித்து வந்தனர்.

வங்காளதேசம் சென்றிருந்த பிரதமர் மோடி, இது பற்றி தெரிய வந்தபோது, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் மகன் பிரசாந்த் குமார் கோவிந்தை செல்போனில் தொடர்பு கொண்டு, குடியரசு தலைவரின் உடல்நலம் குறித்து விசாரித்து அறிந்தார்.

மேலும் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், ராணுவ ஆஸ்பத்திரிக்கு சென்று, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை பார்த்தார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனைகள், சிகிச்சை தொடர்பாக டாக்டர்களிடம் கேட்டு அறிந்தார்.

இந்த நிலையில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கூடுதல் பரிசோதனைகளை நடத்தி, மேல் சிகிச்சையையும் அளிப்பதற்கு வசதியாக எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு மாற்றுவது என ராணுவ ஆஸ்பத்திரி மருத்துவ நிபுணர்கள் முடிவு எடுத்தனர்.

அதன்படி அவரை, எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு மாற்றினர்.  அங்கு அவருக்கு இதயம் தொடர்பான கூடுதல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றின் முடிவுகளின் அடிப்படையில், குடியரசு தலைவருக்கு இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு எடுத்தனர். இதுகுறித்து அவருக்கு தக்க அறிவுரையும் வழங்கினர்.

இந்த அறுவை சிகிச்சையை இன்று நடத்துவதற்கு டாக்டர்கள் முடிவு செய்திருந்தனர்.  இந்நிலையில், இதுபற்றி மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இந்திய குடியரசு தலைவர் மதிப்புமிகு ராம்நாத் கோவிந்துக்கு நடந்த பைபாஸ் அறுவை சிகிச்சை வெற்றியடைந்து உள்ளது.

இதற்காக மருத்துவர்கள் அடங்கிய குழுவுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.  ராஷ்டிரபதிஜியின் உடல்நிலை பற்றி அறிந்து கொள்வதற்காக எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனரிடம் பேசினேன்.  அவர் நலமடைய வேண்டும் மற்றும் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.

Next Story