பெங்களூரு பவுரிங் ஆஸ்பத்திரியில் இளம்பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை


பெங்களூரு பவுரிங் ஆஸ்பத்திரியில் இளம்பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை
x
தினத்தந்தி 1 April 2021 2:23 AM IST (Updated: 1 April 2021 2:23 AM IST)
t-max-icont-min-icon

ஆபாச வீடியோ விவகாரத்தில் பெங்களூரு பவுரிங் ஆஸ்பத்திரியில் இளம்பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அவருக்கு மனநல ஆலோசனையும் டாக்டா்கள் வழங்கினார்கள்.

பெங்களூரு: ஆபாச வீடியோ விவகாரத்தில் பெங்களூரு பவுரிங் ஆஸ்பத்திரியில் இளம்பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அவருக்கு மனநல ஆலோசனையும் டாக்டா்கள்  வழங்கினார்கள்.

இளம்பெண் வாக்குமூலம்

முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி ஒரு இளம்பெண்ணுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ கடந்த மாதம் (மார்ச்) 2-ந் தேதி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து கூடுதல் போலீஸ் கமிஷனர் சவுமேந்து முகர்ஜி தலைமையிலான சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கடந்த 28 நாட்களாக தலைமறைவாக இருந்த இளம்பெண் நேற்று முன்தினம் பெங்களூரு மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு சிறப்பு கோர்ட்டில் நீதிபதி முன்னிலையில் ஆஜரானார்.

அவர், நீதிபதியிடம் 2 மணிநேரம் வாக்குமூலம் அளித்திருந்தார். இளம்பெண் தனது வாக்குமூலத்தில் முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி தனக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 2 முறை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தினார் என்றும், தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அத்துடன் தனது பெற்றோர், ரமேஷ் ஜார்கிகோளியின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விசாரணைக்கு ஆஜர்

அதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு இளம்பெண்ணிடம் சிறப்பு விசாரணை குழு போலீசார், மடிவாளாவில் உள்ள தடயவியல் ஆய்வகத்தில் வைத்து 2 மணிநேரம் விசாரித்தனர். பின்னர் நேற்று முன்தினம் இரவு இளம்பெண் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டார். நேற்று 2-வது நாளாக விசாரணைக்கு ஆஜராகும்படி இளம்பெண்ணுக்கு போலீசார் உத்தரவிட்டு இருந்தனர். அதைத்தொடர்ந்து, நேற்று காலை 10 மணியளவில் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான உதவி போலீஸ் கமிஷனர் கவிதா முன்பு இளம்பெண் ஆஜர்படுத்தப்பட்டார்.

ரமேஷ் ஜார்கிகோளி தன்னை கற்பழித்திருப்பதாக கூறி இருப்பதால், இளம்பெண்ணுக்கு பவுரிங் ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடத்த போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தனர். இதற்காக இளம்பெண்ணுக்கு எந்த மாதிரியான மருத்துவ பரிசோதனைகள் நடத்த வேண்டும் என்பது பற்றி ஆஸ்பத்திரி டாக்டர்களுக்கு நேற்று முன்தினமே சிறப்பு விசாரணை குழு போலீசார் தகவல்களை அனுப்பி வைத்திருந்தனர்.

மருத்துவ பரிசோதனை

அதைத்தொடர்ந்து, நேற்று காலை 11 மணியளவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பவுரிங் ஆஸ்பத்திரிக்கு இளம்பெண் காரில் அழைத்து வரப்பட்டார். அந்த சந்தர்ப்பத்தில் பவுரிங் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் மாற்று வழியில் வருவதற்கு அனுமதிக்கப்பட்டனர். இளம்பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை நடந்த போது ஆஸ்பத்திரி ஊழியர்களும் வெளியே அனுப்பி வைக்கப்பட்டார்கள். இளம்பெண்ணுக்கு ரத்த பரிசோதனை நடத்தப்பட்டது.

அத்துடன் அவரது முடி, ரத்த மாதிரியும் சேகரிக்கப்பட்டது. தடயவியல் ஆய்வுக்கு அனுப்புவதற்காக, அவற்றை போலீசார் டாக்டர்களிடம் கேட்டு இருந்தனர். அதன்படி, இளம்பெண்ணின் முடி, ரத்த மாதிரி உள்ளிட்டவற்றை பாதுகாப்பாக ஒரு கவரில் போட்டு போலீசாரிடம் வழங்கப்பட்டது. ஒட்டு மொத்தமாக இளம்பெண்ணுக்கு 3 மணிநேரத்திற்கும் மேலாக 5 விதமான மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

இளம்பெண்ணுக்கு மனநல ஆலோசனை

குறிப்பாக இளம்பெண் கற்பழிக்கப்பட்டதற்கான காயங்கள் எதுவும் உள்ளதா?, கற்பழிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளாரா? என்பது குறித்த பரிசோதனை நடந்ததாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில், இளம்பெண்ணுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் மருத்துவ பரிசோதனையின் போது தனக்கு தலை வலி இருப்பதாகவும், கை, கால் நடுக்கம் இருப்பதாகவும் டாக்டர்களிடம் இளம்பெண் கூறி இருந்தார்.
இதையடுத்து, இளம்பெண்ணுக்கு டாக்டர்கள் கவுன்சிலிங் (மனநல ஆலோசனை) வழங்கினர். அப்போது கடந்த 28 நாட்களாக தலைமறைவாக இருந்தாலும், போலீஸ் விசாரணைக்கு பயந்து இருந்தாலும், முக்கிய பிரமுகரிடம் இருந்து மிரட்டல் வந்த காரணத்தாலும் மனதளவில் அவர் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று கருதி டாக்டர்கள் சில அறிவுரைகளை வழங்கினார்கள். சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக இளம்பெண்ணுக்கு கவுன்சிலிங் வழங்கினர்.

2-வது நாளாக...

அதைத்தொடர்ந்து, மாலை 4 மணியளவில் பவுரிங் ஆஸ்பத்திரியில் இருந்து இளம்பெண்ணை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் போலீசார் அழைத்து சென்றார்கள். அவரிடம் மடிவாளாவில் உள்ள தடயவியல் ஆய்வகத்தில் வைத்து நேற்று 2-வது நாளாக போலீசார் விசாரணையை தொடங்கினார்கள்.
முன்னதாக இளம்பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை நடந்த பவுரிங் ஆஸ்பத்திரிக்கு வக்கீல் ஜெகதீஷ் வந்திருந்தார். அவர், போலீஸ் அதிகாரிகளிடம் இளம்பெண்ணுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகள் குறித்த விவரங்களை கேட்டு அறிந்து கொண்டார்.

Next Story