கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார், ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி


கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார், ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி
x
தினத்தந்தி 1 April 2021 1:19 PM IST (Updated: 1 April 2021 1:19 PM IST)
t-max-icont-min-icon

ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

அமராவதி, 

நாடு முழுவதும் இன்று முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. 

இதில் 45 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் தடுப்பூசி போட்டு வருகின்றனர். 

இந்நிலையில் ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் அவரது மனைவி ஒய்.எஸ்.பாரதி ஆகியோர் இன்று குண்டூரில் உள்ள தடுப்பூசி மையத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

45 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கான கொரோனா தடுப்பூசி போடும் பணியினை முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி கொடியசைத்து துவக்கி வைத்தார். கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தற்போதைய சூழ்நிலையில், கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிதான் எங்களின் ஒரே ஆயுதம். எனவே, வைரசிலிருந்து பாதுகாக்க தகுதியுடைய நபர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட வேண்டும்” என்று கூறினார். 

மேலும் மக்களுக்கு தடுப்பூசி போடுவதில் மாநிலத்தின் அணுகுமுறையைக் குறிப்பிட்டு, ஆந்திராவின் ஒவ்வொரு பகுதியிலும் தடுப்பூசி போடுவது குறித்து மாநில அரசின் வார்டு தன்னார்வலர்கள், ஆஷா தொழிலாளர்கள் மற்றும் பிற மாவட்ட அதிகாரிகள் வீடு வீடாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் ஜெகன் மோகன் ரெட்டி கூறினார்.

முன்னதாக 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்திற்கான ஏற்பாடுகள், தடுப்பூசிகள் இருப்பு, கள பிரச்சினைகள் உள்ளிட்டவை குறித்து விவாதிப்பதற்காக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் காணொலி காட்சி வழியாக உயர் மட்ட கூட்டம் ஒன்றை நடத்தினார். இதில் அனைத்து மாநிலங்களின் சுகாதாரத்துறை செயலாளர்கள், தேசிய சுகாதார திட்ட இயக்குனர்கள், மாநில தடுப்பூசி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 72,330 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் வேகமாக பரவி வந்தாலும் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இதுவரை 6,51,17,896 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story