உள்ளூர் மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை - கவர்னரை செல்போனில் தொடர்புகொண்டு புகார் அளித்த மம்தா


உள்ளூர் மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை - கவர்னரை செல்போனில் தொடர்புகொண்டு புகார் அளித்த மம்தா
x
தினத்தந்தி 1 April 2021 3:09 PM IST (Updated: 1 April 2021 3:09 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் மக்கள் வாக்களிக்க செல்ல அனுமதிக்கப்படாமல் வெளியாட்களால் தடுக்கப்படுகின்றனர் என்று மேற்குவங்காள கவர்னரிடம் செல்போனில் தொடர்புகொண்டு மம்தா புகார் அளித்துள்ளார்.

கொல்கத்தா,

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, 30 தொகுதிகளுக்கு முதல்கட்ட தேர்தல் கடந்த 27-ம் தேதி நடைபெற்றது. அதில் சுமார் 80 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. எஞ்சிய 7 தொகுதிகளுக்கு முறையே ஏப்ரல் 1, 6, 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

அதன்படி, 2-ம் கட்ட தேர்தல் இன்று 30 தொகுதிகளுக்கு நடைபெற்று வருகிறது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்காள முதல்மந்திரியுமான மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியும் அடக்கம். மம்தாவை எதிர்த்து பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் சில வாக்குச்சாவடிகளில் மோதல் சம்பவங்களும் அரங்கேறியுள்ளது.

இந்நிலையில், நந்திகிராம் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறும் ஒரு வாக்குச்சாவடிக்கு மேற்குவங்காள முதல்மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இன்று மதியம் சென்றார். அப்போது, மம்தா வருகைக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பியதாக தகவல்கள் வெளியானது.

அப்போது பேசிய மம்தா, கோஷங்களை எழுப்புபவர்கள் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள். அவர்கள் பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தில் இருந்து வந்துள்ளார்கள். மத்திய பாதுகாப்பு படையினர் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கின்றனர் என்று கூறினார்.

மேலும், வாக்குச்சாவடி வாசலில் இருந்தவாறு மம்தா பானர்ஜி மேற்குவங்காள கவர்னர் ஜக்தீப் தங்கரை செல்போனில் தொடர்புகொண்டு பேசினார். கவர்னரிடம் பேசிய மம்தா பானர்ஜி, அவர்கள் (உ.பி., பீகாரை சேர்ந்த வெளியூர் வாசிகள்) உள்ளூர் மக்கள் வாக்களிக்க செல்வதை அனுமதிக்கவில்லை. காலை முதல் நான் இங்கு பிரசாரம் செய்து வருகிறேன். இங்குள்ள நிலைமையை நீங்கள் வந்து பார்க்க வேண்டும்’ என்றார்.

Next Story