நந்திகிராமில் தேர்தலின்போது மோதல்; வாக்குச்சாவடிகளுக்கு மம்தா சென்றதால் பரபரப்பு; வன்முறை தொடர்பாக தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்கிறது


நந்திகிராமில் தேர்தலின்போது மோதல்; வாக்குச்சாவடிகளுக்கு மம்தா சென்றதால் பரபரப்பு; வன்முறை தொடர்பாக தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்கிறது
x
தினத்தந்தி 2 April 2021 12:19 AM IST (Updated: 2 April 2021 12:19 AM IST)
t-max-icont-min-icon

நந்திகிராம் தொகுதியில் வாக்குப்பதிவின்போது, திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க. தொண்டர்கள் மோதிக்கொண்டனர். வாக்குச்சாவடிகளுக்கு மம்தா சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. வன்முறை தொடர்பாக நிர்வாகத்திடம் தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்டுள்ளது.

கவனம் ஈர்த்த நந்திகிராம்
5 மாநில சட்டசபை தேர்தலில் மேற்கு வங்காள மாநிலத்தின் நந்திகிராம் தொகுதி, நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த தொகுதியில்தான் முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, அவரது நம்பிக்கைக்குரிய தலைவர்களில் ஒருவராக இருந்து, இப்போது பா.ஜ.க.வுக்கு தாவியுள்ள சுவேந்து அதிகாரி களம் இறங்கி உள்ளார். இருவரும் ஒருவரை ஒருவர் வீழ்த்த சபதம் செய்துள்ளனர்.நேற்று மேற்குவங்காளத்தில் 2-வது கட்ட தேர்தலை சந்தித்த 30 தொகுதிகளில் இந்த தொகுதி முதன்மையானது.

சுவேந்து அதிகாரி வாக்குப்பதிவு
பிற தொகுதிகளைப் போன்று நந்திகிராமில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மம்தா வாக்குப்பதிவு நிலவரத்தை கண்காணித்தார்.காலையில் வாக்குப்பதிவு தொடங்கியபோதே, இந்த தொகுதியில் வாக்காளராக இப்போது பதிவு செய்துள்ள, பா.ஜ.க. வேட்பாளர் சுவேந்து அதிகாரி தனது வாக்கைப் பதிவு செய்தார்.

பயந்து போன மம்தா கட்சி ஏஜெண்டு
இந்த தொகுதியில் உள்ள போயல் என்ற இடத்தில் அமைந்திருந்த வாக்குச் சாவடியில் மம்தா கட்சி ஏஜெண்டாக பணியாற்ற வேண்டிய மிருணாள் காந்தி ஜனா வராமல் அவரது நாற்காலி காலியாக இருந்தது.ஒரு போலீஸ் அதிகாரி அவரது வீட்டுக்கு சென்று விசாரித்தபோது, 2 நாட்களுக்கு முன்பு பா.ஜ.க. தொண்டர்கள் வந்து அவரது வீட்டின் சமையலறையை தாக்கிய நிலையில், அவர் வாக்குச் சாவடிக்கு வந்தால் மேலும் தாக்குதல் நடத்தக்கூடும் என அஞ்சுவதால் வீட்டை விட்டு வெளியே வர மாட்டார் என குடும்பத்தினர் கூறி விட்டனர்.

வாக்குச்சாவடிக்கு போன மம்தா
இது குறித்து அறிந்த மம்தா பானர்ஜி சுமார் 1 மணிக்கு அந்த வாக்குச்சாவடிக்கு சென்றபோது, பா.ஜ.க. தொண்டர்கள் ‘ஜெய்ஸ்ரீராம்’ என கோஷம் போட்டனர். மம்தா தனது தொகுதிக்குட்பட்ட பல வாக்குச்சாவடிகளில் வன்முறை நடந்துள்ளபோதும், புகார் செய்தும், மத்திய படை கண்டுகொள்ளவில்லை என குற்றம் சாட்டினார்.கோகுல் நகர் என்ற இடத்தில் வாக்குச்சாவடியில் மம்தா 
கட்சியினருக்கும், பா.ஜ.க. வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மம்தா, மாநில கவர்னர் ஜெகதீப் தாங்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேர்மையாகவும், சுதந்திரமாகவும் வாக்குப்பதிவை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.உ பீகார், உத்தரபிரதேசம் போன்ற பிற மாநிலங்களில் இருந்து குண்டர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்கள் மத்திய படைகளால் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

போலீஸ் குவிப்பு
7-ம் எண் வாக்குச்சாவடியில் உண்மையான வாக்காளர்களை ஓட்டுப்போடவே மத்திய படையினர் அனுமதிக்கவில்லை என மம்தா கட்சியினர் குற்றம் சாட்டினர். உடனே மம்தா நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களுடன் அங்கு சென்றார். ஆனால் அவர் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று பா.ஜ.க.வினர் வலியுறுத்தினர். இதனால் பதற்றம் ஏற்பட்டது.நந்திகிராம் பிளாக்-2 பகுதியில் பல வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்கு அளிக்க அனுமதிக்கப்படவில்லை என மம்தா கட்சியினர் குற்றம் சாட்டினர். அதை பா.ஜ.க. மறுத்தது. அந்த கட்சி தொண்டர் உதய் துபே என்பவர் நந்திகிராம் 
பிளாக் 1 பகுதியில் தூக்கில் தொங்கியதாகவும், மம்தா கட்சி குண்டர்களின் மிரட்டலே இதற்கு காரணம் என பா.ஜ.க.வினர் குற்றம் சாட்டினார்கள். சம்பவ இடத்தில் போலீஸ் குவிக்கப்பட்டது.

தேர்தல் கமிஷன் நடவடிக்கை
நந்திகிராமில் போயலில் நடந்த வன்முறை குறித்தும், கேஷ்பூர் பகுதியில் ஒருவர் இறந்தது பற்றியும் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாநில நிர்வாகத்திடம் தேர்தல் கமிஷன் சார்பில் துணை தேர்தல் கமிஷனர் சுதீப் ஜெயின் கேட்டுள்ளார். நந்திகிராமைப் பொறுத்தமட்டில் 144 தடை உத்தரவு, பரஸ்பர புகார்கள், பதற்றத்துக்கு மத்தியில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.

Next Story