ஒரே நாளில் எகிறியது, கொரோனா தொற்று; 72 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு
ஒரே நாளில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் எகிறியது. 72 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எகிறியது, கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வந்தது. தினசரி பாதிப்பு 10 ஆயிரத்துக்குள் இருந்து வந்த நிலை மாறியது. ஒரே நாளில் 68 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டது.ஆனால் 30-ந்தேதியும், 31-ந்தேதியும் தொடர்ந்து 2 நாட்களாக கொரோனா பரவல் இறங்குமுகம் கண்டது. நேற்று முன்தினம் பாதிப்பு அதிரடியாக 56 ஆயிரத்து 211 ஆக குறைந்தது.ஆனால் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரே நாளில் 72 ஆயிரத்து 330 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கொரோனா பரவல் இப்படி எகிறி இருப்பது அதிர வைப்பதாக அமைந்துள்ளது. கடந்த அக்டோபர் 11-ந்தேதிக்கு பிறகு இதுவே அதிகபட்ச பாதிப்பு என புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
8 மாநிலங்களில் நிலைமை மோசம்
நாட்டின் மொத்த பாதிப்பு 1 கோடியே 22 லட்சத்து 21 ஆயிரத்து 665 ஆக உயர்ந்துள்ளது. ஆனாலும் உலகளவில் மோசமான பாதிப்பில் அமெரிக்காவையும், பிரேசிலையும் தொடர்ந்து 3-வது இடத்திலேயே இந்தியா நீடிக்கிறது.மராட்டிய மாநிலத்தில் நேற்று 39 ஆயிரத்து 544 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பது கவலை அளிப்பதாக அமைந்துள்ளது. சத்தீஷ்காரில் 4,563 பேரும், கர்நாடகத்தில் 4,225 பேரும் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.மேலும் நேற்று கொரோனா தொற்றுக்கு ஆளான 72 ஆயிரத்து 330 பேரில், மராட்டியம், சத்தீஷ்கார், கர்நாடகம், பஞ்சாப், கேரளா, தமிழகம், குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 8 மாநிலங்களை சேர்ந்தவர்கள் 84.61 சதவீதத்தினர் ஆவார்கள். இந்த மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் நிலைமை மோசமாக உள்ளது.
459 பேர் பலி
நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரே நாளில் நாடு முழுவதும் கொரோனாவுக்கு அதிரடியாக 459 பேர் பலியாகி இருப்பது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன்மூலம் இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 62 ஆயிரத்து 927 ஆக உயர்ந்துள்ளது.நேற்று மராட்டியத்தில் மட்டுமே 227 பேர் உயிரிழந்து இருப்பது அந்த மாநில மக்களை தீராத சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
அந்தமான் நிகோபார், அருணாசலபிரதேசம், சண்டிகார், தத்ராநகர் ஹவேலி டாமன் தியு, ஜார்கண்ட், லடாக், லட்சத்தீவு, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, ஒடிசா, புதுச்சேரி, சிக்கிம், திரிபுரா ஆகிய 15 மாநிலங்கள் மட்டும் கொரோனா உயிரிழப்பில் இருந்து நேற்று தப்பின.இறப்புவிகிதம் 1.33 சதவீதம் ஆக உள்ளது.
40 ஆயிரம் பேர் குணம்
நேற்று முன்தினம் ஒரு நாளில் 41 ஆயிரத்து 280 பேர் மீட்கப்பட்ட நிலையில் நேற்று மீட்பு சற்றே குறைந்தது. 24 மணி நேரத்தில் 40 ஆயிரத்து 382 பேர் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து குணம் அடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மராட்டிய மாநிலத்தில் ஒரே நாளில் 23 ஆயிரத்து 600 பேர் கொரோனா பிடியில் இருந்து மீட்கப்பட்டனர். இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 14 லட்சத்து 74 ஆயிரத்து 683 ஆக உயர்ந்துள்ளது.கொரோனா மீட்பு விகிதம் 93.89 சதவீதமாக உள்ளது.
22-வது நாளாக அதிகரிப்பு
கொரோனாவில் இருந்து மீட்கப்படுவதற்காக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து 22-வது நாளாக நேற்றும் உயர்ந்தது. நேற்றைய நிலவரப்படி நாட்டில் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 5 லட்சத்து 84 ஆயிரத்து 55 ஆகும். இது மொத்த பாதிப்பில் 4.78 சதவீதம் ஆகும்.மராட்டிய மாநிலத்தில் மட்டுமே 3.57 லட்சம் பேர் கொரோனா மீட்பு சிகிச்சையில் உள்ளனர்.
Related Tags :
Next Story