அசாம் முதற்கட்ட தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் சிவப்பு அட்டையை காட்டியுள்ளனர்; கால்பந்து விளையாட்டை ஒப்பிட்டு பிரதமர் மோடி பேச்சு


அசாம் முதற்கட்ட தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் சிவப்பு அட்டையை காட்டியுள்ளனர்; கால்பந்து விளையாட்டை ஒப்பிட்டு பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 2 April 2021 4:15 AM IST (Updated: 2 April 2021 4:15 AM IST)
t-max-icont-min-icon

அசாம் முதற்கட்ட தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் சிவப்பு அட்டையை காட்டியிருப்பதாக பிரதமர் மோடி பேசினார்.

தேர்தல் பிரசாரம்
அசாமில் 2 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளநிலையில், 3-வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு வருகிற 6-ந்தேதி நடக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.மாநிலத்தில் ஆளும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் தேசிய தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் பிரதமர் மோடி நேற்று கோக்ரஜாரில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.

சிவப்பு அட்டை
அப்போது அவர் கூறுகையில், ‘அசாமில் நடந்த முதற்கட்ட வாக்குப்பதிவில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் தங்கள் ஆசீர்வாதத்தை வழங்கியுள்ளனர். அசாமில் கால்பந்து ஒரு புகழ்பெற்ற விளையாட்டு ஆகும். கால்பந்து பேச்சுவழக்கில் கூறினால், முதற்கட்ட வாக்குப்பதிவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு அசாம் மக்கள் சிவப்பு அட்டையை காட்டியுள்ளனர்’ என்று தெரிவித்தார். 

கால்பந்து விளையாட்டில் தவறு செய்யும் வீரர்களை வெளியேற்ற நடுவர்கள் சிவப்பு அட்டையை காட்டுவது வழக்கம். அதை ஒப்பிட்டு பிரதமர் மோடி இவ்வாறு கூறியுள்ளார்.

அமைதி, மரியாதை
தொடர்ந்து அவர் பேசும்போது முந்தைய காங்கிரஸ் அரசுகளை குற்றம் சாட்டி பேசினார். அவர் கூறியதாவது:-அசாமில் போடோ பகுதிகளில் நிகழ்ந்து வந்த வன்முறைகளை தடுக்க முந்தைய காங்கிரஸ் அரசுகளும், மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசுகளும் எதுவும் செய்யவில்லை. தனது நீண்ட கால ஆட்சியில் போடோலாந்து மக்களுக்கு வெடிகுண்டு, துப்பாக்கி உள்ளிட்ட கலாசாரங்களையே காங்கிரஸ் வழங்கியிருக்கிறது.ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியோ போடோலாந்துக்கு அமைதியும், மரியாதையையும் பரிசளித்திருக்கிறது.

சட்ட விரோத குடியேறிகள்
வங்காளதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக குடியேறுபவர்களை பத்ருத்தின் அஜ்மலின் ஏ.ஐ.யு.டி.எப் கட்சி ஆதரிக்கிறது. ஆனால் அந்த கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்திருக்கிறது.இதற்காக காங்கிரசும், அதன் கூட்டணி கட்சிகளும் தண்டிக்கப்படுவார்கள். அசாமில் மிகவும் கடினமாக உழைத்து பெறப்பட்ட அமைதியை யாரும் கொள்ளையடிக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.போடோலாந்து பிராந்தியத்தில் அமைதி, வளம் மற்றும் பாதுகாப்பு ஆகியவையே எங்கள் தாரக மந்திரம் ஆகும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

மேற்கு வங்காளத்தில் பிரசாரம்
மேற்கு வங்காளத்திலும் நேற்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடந்த நிலையில், அங்கும் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார். தெற்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் உரையாற்றிய அவர், மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா அபார வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘மேற்கு வங்காளத்தில் அமைதி மற்றும் சாதனை அளவான வாக்குப்பதிவுடன் முதற்கட்ட தேர்தல் முடிந்திருப்பதை பார்க்கும்போது மக்கள் பா.ஜனதாவுக்கு மிகப்பெரிய ஆதரவை அளித்துள்ளது தெரியவந்துள்ளது. மாநிலத்தில் பா.ஜனதா 200 இடங்களை தாண்டும் என ஒரு சில வாரங்களுக்கு முன்பு வரை மக்கள் கூறி வந்தனர். ஆனால் இந்த வலுவான தொடக்கத்தின் மூலம் மக்களின் இந்த குரல் கடவுளாலும் ஆசீர்வதிக்கப்பட்டு உள்ளது. மேற்கு வங்காளத்தில் பா.ஜனதாவின் வெற்றி எண்ணிக்கை 200-ஐ தாண்டும்’ என்று தெரிவித்தார்.

பா.ஜனதாவுக்கு எதிராக ஒன்று திரளுமாறு எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மம்தா கடிதம் எழுதியிருப்பதை சுட்டிக்காட்டி பேசிய மோடி, தேர்தல் தோல்வியை கண்டு அஞ்சுவதால்தான் பிற கட்சிகளின் தலைவர்களை மம்தா உதவிக்கு அழைத்திருப்பதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

Next Story