புனேவில் பெண் மாஜிஸ்திரேட்டு லஞ்ச வழக்கில் கைது - லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி


புனேவில் பெண் மாஜிஸ்திரேட்டு லஞ்ச வழக்கில் கைது - லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி
x
தினத்தந்தி 2 April 2021 5:15 AM IST (Updated: 2 April 2021 5:15 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய மாநிலம் புனேவில் பெண் மாஜிஸ்திரேட்டு ஒருவர் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் பால் பண்ணை நடத்தி வரும் ஒருவருக்கு எதிரான வழக்கை கோர்ட்டு மூலம் சாதகமாக்கி தருவதாக கூறி சுபாவாரி கெய்க்வாட் என்பவர் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கேட்டார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத பால்பண்ணை நடத்தி வருபவர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறிய யோசனையின் பேரில் அவர், சபாவாரி கெய்க்வாட்டை சந்தித்து முன்பணமாக ரூ.50 ஆயிரம் கொடுத்தார்.

அப்போது, அங்கு மறைந்து இருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீசார், சுபாவாரி கெய்க்வாட்டை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், பணி இடைநீக்கம் செய்யப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் பானுதாஸ் ஜாதவ் என்பவரை அடையாளம் காட்டினார். இதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

அப்போது வட்காவ் மாவல் கோர்ட்டின் பெண் மாஜிஸ்திரேட்டு அர்ச்சனா ஜட்கார் தான் முக்கிய குற்றவாளி என்பது தெரியவந்தது. லஞ்ச பணத்துக்காக வழக்கை சாதகமாக முடித்து தருவதாக அவர் கூறியிருந்தது தெரியவந்தது. அவரது வழிகாட்டுதலின் பேரிலேயே கைதான இருவரும் செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து பெண் மாஜிஸ்திரேட்டு மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

எனவே முன்ஜாமீன் கேட்டு புனே மாவட்ட லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட்டில், மாஜிஸ்ரேட்டு அர்ச்சனா ஜட்கார் மனு செய்தார். அந்த மனுவை நீதிபதி கோகரே பாட்டீல் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து மாஜிஸ்திரேட்டு அர்ச்சனா ஜட்கார், லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை வருகிற 5-ந் தேதி வரை லஞ்ச ஒழிப்பு போலீஸ் காவலில் ஒப்படைத்து சிறப்பு கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார், பெண் மாஜிஸ்திரேட்டு அர்ச்சனா ஜட்காரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். லஞ்ச வழக்கில் மாஜிஸ்திரேட்டு ஒருவர் கைதாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story