மாநில அந்தஸ்து குறித்த அறிவிப்பு இல்லாததால் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியே வர ரங்கசாமி தயாரா? நாராயணசாமி கேள்வி


மாநில அந்தஸ்து குறித்த அறிவிப்பு இல்லாததால் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியே வர ரங்கசாமி தயாரா? நாராயணசாமி கேள்வி
x
தினத்தந்தி 2 April 2021 5:20 AM IST (Updated: 2 April 2021 5:20 AM IST)
t-max-icont-min-icon

புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மாநில அந்தஸ்து குறித்த அறிவிப்பு இல்லாததால் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியே வர ரங்கசாமி தயாரா? என்று நாராயணசாமி கேள்வி விடுத்தார்.

கூட்டணியில் முரண்பாடு

கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுவைக்கு வந்த பிரதமர் மோடி மாநில அந்தஸ்து குறித்து அறிவிப்பார், கடன் தள்ளுபடி செய்வார் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஏமாற்றம்தான் மிஞ்சியது. ரங்கசாமியும் மாநில அந்தஸ்து குறித்து கேட்டார். ஆனால் பிரதமர் எதையும் அறிவிக்கவில்லை. இதிலிருந்து கூட்டணியில் முரண்பாடு உள்ளது தெரிகிறது.மாநில அந்தஸ்து குறித்த அறிவிப்பு இல்லாததால் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியே வர ரங்கசாமி தயாரா? அவர் கூட்டணியில் உள்ளாரா? இல்லையா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

நீதிபதி விசாரணை

பிரசாரத்துக்கு வந்த இடத்தில் என்னை தனிப்பட்ட முறையில் விமர்சித்துள்ளார். என் மீது ஊழல் குற்றச்சாட்டை கூறிய அவர் அதை நிரூபிக்க தயாரா? இதுதொடர்பாக ஐகோர்ட்டு நீதிபதி தலைமையிலான விசாரணைக்கு நான் தயாராக உள்ளேன். பிரதமர் அறிவிப்பாரா? அவரது புகாருக்கு என்ன ஆதாரம் உள்ளது?

புதுவை அரசின் திட்டங்களை கவர்னர் மூலம் தடுத்து நிறுத்திவிட்டு எங்களை குறைகூற யாருக்கும் தகுதியில்லை. பிரதமரின் புதுவை வருகையினால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். பிரதமர், மத்திய மந்திரிகள் வருகிறார்கள். ஆனால் புதுவை மாநிலத்துக்கு எதையும் அறிவிக்கவில்லை.

மோடி படமில்லை

பா.ஜ.க. தொகுதியில் பிரசாரம் செய்ய என்.ஆர்.காங்கிரசார் வருவதில்லை. பா.ஜ.க.வின் புதுவை மாநில தலைவரான சாமிநாதன் எம்.எல்.ஏ.வே பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்‌ஷா ஆகியோரின் படங்களை போட்டு ஓட்டுகேட்கவில்லை.

புதுவையில் தேர்தல் நேரத்தில் கவர்னர் ஆய்வு நடத்தி வருகிறார். காலாப்பட்டு, கருவடிக்குப்பம் பகுதியில் ஆய்வுக்கு சென்ற அவரை பா.ஜ.க. வேட்பாளர் கல்யாணசுந்தரம் வரவேற்கிறார். கவர்னர் பா.ஜனதாவுக்கு ஆதரவாக செயல்படுகிறார்.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

மல்லிகார்ஜூன கார்கே

நாடாளுமன்ற மேலவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:-

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்தான் புதுவையில் மேம்பாலங்கள் கட்டப்பட்டது. புதுவை மக்கள் எப்போதும் காங்கிரஸ் கூட்டணிக்கே ஆதரவாக இருந்துள்ளனர். பா.ஜ.க. அரசு நாட்டை பேரழிவுக்கு கொண்டு சென்றுள்ளது. மதம், சாதி என்று மக்களை பிரித்தாளுகிறது.

மத்திய அரசின் ஏஜென்சிகளான சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு போன்றவற்றை வைத்து மிரட்டுகின்றனர். அவர்களுக்கு புதுவை மக்கள் பாடம் புகட்டவேண்டும். இதுபோன்ற செயல்களை எதிர்காலத்தில் செய்யாமல் இருப்பதற்கான எச்சரிக்கையாக அது இருக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது வைத்திலிங்கம் எம்.பி., மூத்த துணைத்தலைவரும், ஒருங்கிணைப்பாளருமான தேவதாஸ், துணைத்தலைவர் பெத்தபெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story