புதுச்சேரி வாக்காளர்களின் செல்போன் நம்பர்கள் வெளியானது குறித்து விசாரணை நடத்த வேண்டும்; ஆதார் ஆணையத்துக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
ஆதாருக்காக பதிவு செய்யப்பட்ட புதுச்சேரி வாக்காளர்களின் செல்போன் எண்கள் எப்படி வெளியானது? என்பது குறித்து விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய ஆதார் ஆணையத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தடை வேண்டும்
புதுச்சேரி பா.ஜ.க.வினர், ஆதார் ஆணையத்தில் இருந்து வாக்காளர்களின் செல்போன் நம்பர்களை சட்டவிரோதமாக பெற்று, தொகுதி வாரியாக வாட்ஸ் அப் குரூப்கள் ஆரம்பித்து, அதன் வழியாக தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர். இதுகுறித்து சிறப்பு புலனாய்வு விசாரணை குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும். இந்த வகை தேர்தல் பிரசாரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி தலைவர் ஆனந்த் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
ஆணையம் அமைதி
அப்போது, புதுச்சேரி பா.ஜ.க. சார்பில் ஆஜரான வக்கீல், “ஆதார் ஆணையத்தில் இருந்து வாக்காளர்களின் செல்போன் நம்பர் உள்ளிட்ட விவரங்களை பெறவில்லை. பா.ஜ.க. நிர்வாகிகள், வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் இருந்து செல்போன் நம்பரை பெற்று, பிரசாரம் செய்தனர். பொதுமக்களும் விரும்பி தங்களது செல்போன் நம்பர்களை கொடுத்துள்ளனர்” என்று கூறினார்.மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஆர்.வைகை, “தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பிய பிறகும், ஆணையத்தின் அனுமதி பெறாமல் எஸ்.எம்.எஸ். மூலம் மார்ச் 29-ந்தேதி வரை பா.ஜ.க.வினர் பிரசாரம் செய்தனர். வீடு வீடாக சென்று செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை சேகரித்ததாக பா.ஜ.க. தரப்பில் கூறுவதை நம்ப முடியாது. ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட செல்போன் நம்பருக்கு மட்டுமே இந்த பிரசார எஸ்.எம்.எஸ்.கள் வருகின்றன. மற்ற செல்போன் நம்பர்களுக்கு வரவில்லை. ஆனால், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் அமைதி காத்து வருகிறது” என்று வாதிட்டார்.
விசாரணை அறிக்கை
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பிய பிறகும் மார்ச் 29-ந்தேதி வரை எஸ்.எம்.எஸ். மூலம் பிரசாரம் செய்த பா.ஜ.க.வின் நடவடிக்கை தனிமனித உரிமை மீறல் ஆகும். ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்களுக்கு மட்டுமே எஸ்.எம்.எஸ்.கள் வந்துள்ளதால், வாக்காளர்களின் விவரங்கள் எப்படி கசிந்தன என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
கட்சியினர் வீடு வீடாக சென்று விவரங்களை சேகரித்ததாக கூறிய பா.ஜ.க. தரப்பு விளக்கம் ஏற்கும்படியாக இல்லை. ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்கள் எப்படி வெளியானது? என்பது குறித்து விசாரணை நடத்தி, ஆதார் ஆணையம் அறிக்கை அளிக்க வேண்டும். விசாரணையை 6 வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்” என்று உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story