மராட்டியத்தில் ஊரடங்கு அமல்படுத்தக்கூடாது என வலியுறுத்தி போராட்டம்


மராட்டியத்தில் ஊரடங்கு அமல்படுத்தக்கூடாது என வலியுறுத்தி போராட்டம்
x
தினத்தந்தி 2 April 2021 8:23 AM IST (Updated: 2 April 2021 8:23 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே, சூசமாக கூறியிருந்தார்.

மும்பை, 

கொடிய கொரோனா அரக்கனை கட்டுப்படுத்த அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் அரசியல், மத ரீதியான கூட்டங்கள் உள்பட அனைத்து வகையிலான மக்கள் கூடுதலுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

திருமணங்களில் 50 பேரும், இறுதி சடங்கில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது. மேலும் இரவு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் இரவு 8 மணிக்கு மேல் மக்கள் இன்றி வீதிகள் வெறிச்சோடி விடுகின்றன. கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களுக்கு கடும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, சுகாதார நெருக்கடியை சமாளிக்க பகல் நேரத்திலும் ஊரடங்கை அமல்படுத்த அரசு திட்டமிட்டு வருகிறது. அதிக பொருளாதார பாதிப்பு இல்லாத ஊரடங்கு திட்டத்தை தயாரிக்கும்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மந்திரி உத்தவ் தாக்கரே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இதற்கு மத்தியில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தினால் மக்கள் மிக மோசமாக பாதிக்கப்படுவார்கள் என்று சில மந்திரிகள் கருத்து தெரிவித்து இருந்தனர்.

ஆனால் மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே, ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக சூசமாக கூறியிருந்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ஊரடங்கை அமல்படுத்த அரசு விரும்பவில்லை. ஆனாலும் மக்களின் உயிர் மிக முக்கியம். இதன் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது உள்ளது. எனவே வரும் நாட்களில் கடுமையான நடவடிக்கைகளை சந்திக்க மக்கள் தயாராக வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

 இந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் மும்பை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட கூடும் என எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் ஓஷிவாராவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story