கிழக்கு லடாக்கில் மீதமுள்ள பகுதிகளில் இருந்தும் விரைவில் படை விலக்கப்படும்; மத்திய அரசு நம்பிக்கை
கிழக்கு லடாக்கில் இந்தியா-சீனா இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து இருநாடுகளும் படைகளை குவித்தன.
அந்த படைகளை திரும்பப்பெறுவது தொடர்பாக இரு நாடுகளும் நீண்ட நாட்கள் பேச்சுவார்த்தை நடத்தியதன் பலனாக கிழக்கு லடாக்கின் பங்கோங் சோ ஏரிக்கரையில் இருந்து இருதரப்பும் சமீபத்தில் படைகளை விலக்கிக்கொண்டன. அங்கு மீதமுள்ள பகுதிகளில் இருந்தும் விரைவில் படைகள் திரும்பப் பெறப்படும் என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘பங்கோங் சோ ஏரிப்பகுதியில் படைகளை விலக்கியது முன்னோக்கிய செயல்பாடுகளில் ஒரு முக்கியமான நடவடிக்கை ஆகும். இது அசல் எல்லைக்கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் நீடித்து வரும் பிற பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கான சிறந்த அடித்தளத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த அடிப்படையில் இரு நாடுகளும் ராணுவம் மற்றும் தூதரக ரீதியாக தொடர்ந்து தொடர்பில் இருக்கின்றன. இதன்மூலம் கிழக்கு லடாக்கின் பிற பகுதிகளில் இருந்தும் விரைவில் படைகளை விலக்க இந்தியாவுடன் சீனா இணைந்து செயல்படும் என நம்புகிறோம்’ என்று தெரிவித்தார்.
கிழக்கு லடாக்கில் நீடிக்கும் பிற பிரச்சினைகளை விரைவாக தீர்ப்பது தொடர்பாக இரு தரப்பிலும் ஒருமித்த கருத்து உருவாகி இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.