அசாம்: பாஜக வேட்பாளரின் காரில் வாக்குப்பதிவு எந்திரம் கொண்டு செல்லப்பட்ட விவகாரம் - காங்கிரஸ் போராட்டம்
அசாமில் பாஜக வேட்பாளரின் காரில் வாக்குப்பதிவு எந்திரம் கொண்டு செல்லப்பட்ட விவகாரத்தை கையில் எடுத்துள்ள காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
கவுகாத்தி,
அசாம் சட்டசபை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பா.ஜனதா வேட்பாளரின் காரில் கொண்டு சென்றதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, 4 அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிடப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
பா.ஜனதா ஆட்சி நடக்கும் அசாமில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. 2-ம் கட்ட தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. அன்று இரவு, ராதாபாரி (தனி) தொகுதியில் இந்திரா பள்ளிக்கூட வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், கரிம்கஞ்ச் நகரில் அந்த எந்திரங்களை பாதுகாத்து வைக்கும் கட்டிடத்துக்கு கொண்டு செல்ல ஒரு பா.ஜனதா வேட்பாளரின் காரில் ஏற்றிச் செல்லப்பட்டது.
இதை அறிந்து காங்கிரஸ் ஆதரவாளர்கள் அக்காரை முற்றுகையிட்டு கல்வீசி தாக்குதல் நடத்தினர். தகவல் அறிந்து போலீஸ் துணை கமிஷனரும், போலீஸ் சூப்பிரண்டும் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் கூட்டத்தை சமாதானப்படுத்த முயன்றனர். கல்வீச்சில் போலீஸ் சூப்பிரண்டின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தை கலைத்தனர். பின்னர்,வாக்குப்பதிவு எந்திரத்தை பதார்கண்டி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பிறகு அங்கிருந்து கரிம்கஞ்ச் நகர கட்டிடத்தில் சேர்க்கப்பட்டது.
வாக்குப்பதிவு எந்திரம், பா.ஜனதா வேட்பாளரின் காரில் கொண்டு செல்லப்பட்ட சம்பவம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, இதில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி தலைமை அதிகாரி உள்பட 4 அதிகாரிகளை தேர்தல் கமிஷன் இடைநீக்கம் செய்துள்ளது. சிறப்பு பார்வையாளரிடம் அறிக்கை கேட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி தலைமை அதிகாரி மற்றும் 3 தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் சார்பில் ஒதுக்கப்பட்ட வாகனம், 1-ந் தேதி இரவு 9 மணியளவில் கோளாறு ஏற்பட்டு நின்று விட்டது. போக்குவரத்து நெரிசல் மற்றும் மோசமான வானிலையால், பிற தேர்தல் வாகனங்களில் இருந்து தொடர்பு துண்டிக்கப்பட்டது.
செக்டார் அதிகாரி, வேறு வாகனத்துக்கு ஏற்பாடு செய்யும் பணியில் ஈடுபட்டார். தங்களிடம் பயன்படுத்தப்பட்ட ஓட்டுப்பதிவு எந்திரம் இருந்ததால், அதன் முக்கியத்துவம் கருதி, தேர்தல் அலுவலர்கள் ஒரு தனியார் காரில் ‘லிப்ட்’ கேட்டு ஏறிச்சென்றனர்.
இரவு 10 மணியளவில், அந்த வாகனத்தில் அவர்கள் கரிம்கஞ்ச் மாவட்டம் கனைஷில் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது சுமார் 50 பேர் கொண்ட கும்பல் காரை சூழ்ந்து கொண்டது. சரமாரியாக கல்வீசித் தாக்கியது.
அந்த கும்பலின் தலைவனிடம் தேர்தல் அலுவலர்கள் விளக்கம் கேட்டனர். அதற்கு அந்த நபர், அந்த கார், பதார்கண்டி என்ற பக்கத்து தொகுதியின் பா.ஜனதா வேட்பாளர் கிருஷ்ணேந்து பாலுக்கு சொந்தமானது என்றும், தில்லுமுல்லு செய்வதற்காகவே அந்த காரில் ஓட்டுப்பதிவு எந்திரத்தை கொண்டு செல்வதாகவும் கூறினார். அதன்பிறகுதான், தேர்தல் அலுவலர்கள், ஏதோ குழப்பம் நடந்திருக்கிறது என்பதை உணர்ந்தனர். செக்டார் அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் இன்னும் நிறைய பேர் திரண்டு, தேர்தல் அலுவலர்களை சிறைப்பிடித்தனர். பிறகு போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு அவர்களை கலைத்தனர்’ என தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், வாக்குப்பதிவு எந்திரம் பாஜக வேட்பாளர் காரில் கொண்டுசெல்லப்பட்ட சம்பவத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், வாக்குப்பதிவு எந்திரம் பாஜக வேட்பாளர் காரில் கொண்டுசெல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று போராட்டம் நடைபெற்று வருகிறது. அசாமின் கவுகாத்தியில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் கட்சியின் பாஜக வேட்பாளர்களை கண்டித்தும் இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கை என்ன? என்றும் கேள்வி எழுப்பி போராடி வருகின்றனர்.
போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சுஷ்மிதா தேவ் கூறுகையில், அனைத்து பாஜக வேட்பாளர்களும் சட்டவிரோத வழிமுறைகளை பின்பற்றுகின்றனர். மக்கள் எங்கள் பக்கம் உள்ளனர். பாஜக கலக்கத்தில் உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாஜக வேட்பாளர் கிருஷ்ணேந்து பாலுவின் காரில் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் கிருஷ்ணேந்து பாலு மீது தேர்தல் ஆணையம் எடுத்துள்ள நடவடிக்கை என்ன? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
Related Tags :
Next Story