‘அசாம் சுய சார்பு அடைய போராட்டப்பாதையில் இருந்து திரும்புங்கள்’; தேர்தல் பிரசாரத்தில் போராளிகளுக்கு மோடி அழைப்பு


‘அசாம் சுய சார்பு அடைய போராட்டப்பாதையில் இருந்து திரும்புங்கள்’; தேர்தல் பிரசாரத்தில் போராளிகளுக்கு மோடி அழைப்பு
x
தினத்தந்தி 3 April 2021 6:10 PM GMT (Updated: 3 April 2021 6:10 PM GMT)

அசாமில் தேர்தல் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, மாநிலம் சுய சார்பு அடைவதற்கு போராளிகள் போராட்டப் பாதையில் இருந்து பொதுவான நீரோட்டத்துக்கு திரும்ப வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

மோடி அழைப்பு
முதல்-மந்திரி சர்வானந்தா சோனாவால் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிற அசாமில், சட்டசபைக்கு 3 கட்ட தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. 2 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ளன. 3-வது இறுதிக் கட்ட தேர்தலை சந்திக்கிற போடோலாந்து பிரதேசத்தின் பக்சா மாவட்டத்தில் நேற்று நடந்த பா.ஜ.க. பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சி வன்முறையைத் தூண்டுகிறது. பல்லாண்டு கால போராட்டத்துக்கு பிறகு பொதுவான நீரோட்டத்துக்கு திரும்பியுள்ளவர்களுக்கு புதியதோர் வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டியது எங்களது பொறுப்பாக இருக்கிறது. இதுவரையில் சரண் அடையாதவர்கள் (போராளிகள்) மாநிலத்தின் எதிர்காலத்துக்காக, ஏன் அவர்களுடைய எதிர்காலத்துக்காகவும் பொது நீரோட்டத்துக்கு திரும்ப வேண்டும். அசாம் சுயசார்பு நிலையை அடைவதற்கு நீங்கள் தேவைப்படுகிறீர்கள்.

தாய்மார்களுக்கு வாக்குறுதி
இந்த போடோலாந்து பிரதேசத்தில் உள்ள அனைத்து தாய்மாருக்கும், சகோதரிகளுக்கும் நான் ஒரு வாக்குறுதியை அளிக்கிறேன். உங்கள் குழந்தைகளின் கனவுகள் நனவாக்கப்படும். அவர்கள் கைகளில் ஆயுதங்களை தூக்க வேண்டிதில்லை. அவர்கள் காட்டுக்கு செல்ல வேண்டியது கிடையாது. அவர்கள் துப்பாக்கி தோட்டாக்களுக்கு இரையாக தேவையில்லை.ஒவ்வொரு குழந்தையும் அவர்களது தாய்மாருக்கு முக்கியம். ஆனால் தாய்மார்களின் கண்ணீர், அவர்களுடைய பிள்ளைகள் கைகளில் ஆயுதங்கள் ஏந்துவதையும், காட்டுக்கு போவதையும் தடுத்து நிறுத்தி விடாது. இதுபோன்று மறுபடியும் 
நடக்காது என்பதை பா.ஜ.க. கூட்டணி உறுதிப்படுத்துகிறது.

‘வளர்ச்சியை உறுதி செய்கிறோம்’
அமைதி மற்றும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் வளர்ச்சிப்பாதையில் இந்த மாநிலத்தை அழைத்துச்செல்ல பா.ஜ.க. கூட்டணி உறுதி கொண்டுள்ளது. இதுதான் வரலாற்றுச்சிறப்பு மிக்க போடோலாந்து ஒப்பந்தத்தில் கையெழுத்து போட வைத்தது. பாகுபாடற்ற கொள்கைகளை எங்கள் அரசு வகுக்கிறது. சமூகத்தை பிளவுபடுத்தியவர்கள், ஓட்டு வங்கி அரசியலுக்காக குறிப்பிட்ட பிரிவுகளின் வளர்ச்சிகளுக்காக ரொட்டித்துண்டுகளை எறிந்தவர்கள், தங்களை மதச்சார்பற்றவர்கள் என்று சொல்வது துரதிர்ஷ்டம். ஆனால் நாங்கள் அனைத்து தரப்பினருக்குமான வளர்ச்சியை உறுதி செய்கிறோம். கடந்த 5 ஆண்டுகளில் இரட்டை என்ஜின் அரசுகள் மத்தியிலும், மாநிலத்திலும் இருந்தன. அதன் விளைவாக இந்த மாநிலம், இரட்டை பலன்களை பெற்றது.எந்தவொரு திட்டத்தின் பலனும், சமூகத்தின் அனைத்துப்பிரிவு மக்களையும் சென்றடைய வேண்டும் என்று கருதுகிறோம். நாங்கள் நாட்டுக்காக உழைக்கவும், மக்களின் வாழ்க்கையை மாற்றவும்தான் இங்கே இருக்கிறோம்.

இந்த மாநில மக்கள் மீண்டும் பா.ஜ.க. கூட்டணி ஆள்வதற்கு ஓட்டு போட முடிவு செய்துள்ளனர். நடந்து முடிந்துள்ள 2 கட்ட தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி மீதான அன்பை, பாசத்தை, உற்சாகத்தை மக்கள் எங்கள் மீது காட்டி உள்ளனர் என்பதை எனது அனுபவத்தின் அடிப்படையில் நான் கூறுகிறேன். அவர்கள் வளர்ச்சிக்காக, அமைதிக்காக, நல்லிணக்கத்துக்காக, ஒற்றுமைக்காக உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story