பா.ஜ.க. வெற்றி பெற்றால் வங்காளத்தையும், அதன் மக்களையும் பிளவுபடுத்துவார்கள் - மம்தா பானர்ஜி பிரச்சாரம்


பா.ஜ.க. வெற்றி பெற்றால் வங்காளத்தையும், அதன் மக்களையும் பிளவுபடுத்துவார்கள் - மம்தா பானர்ஜி பிரச்சாரம்
x
தினத்தந்தி 4 April 2021 2:38 AM IST (Updated: 4 April 2021 2:38 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. வெற்றி பெற்றால் வங்காளத்தையும், அதன் மக்களையும் பிளவுபடுத்துவார்கள் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காள சட்டசபைக்கு 8 கட்ட தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு, 2 கட்ட தேர்தல்கள் நடந்த முடிந்துள்ளன. மூன்றாவது கட்ட தேர்தலை நாளை மறுதினம் (6-ந் தேதி) சந்திக்கிற ராய்திகியில், நேற்று நடந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மேற்கு வங்காளத்தில் ஆட்சி செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டால் பா.ஜ.க. குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தும், தேசிய குடிமக்கள் பதிவேட்டை நடைமுறைப்படுத்தி, குடிமக்கள் பலரை வலுக்கட்டாயமாக வெளியேற்றும். அவர்கள் வங்காளத்தையும், அதன் மக்களையும் பிளவுபடுத்துவார்கள்.

அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் அவர்கள் 14 லட்சம் வங்காள மக்கள் பெயர்களையும், 2 லட்சம் பீகார் மக்களின் பெயர்களையும் நீக்கியதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக, ஒவ்வொரு வீட்டிலும் பா.ஜ.க.வுக்கு ஓட்டு போடச்சொல்லி மத்திய படையினர், அச்சுறுத்துகிறார்கள். அதற்காக நீங்கள் பயந்துவிடாதீர்கள். தாய்மார். சகோதரிகள் அவர்களுக்கு சவால் விடுங்கள். தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதற்கு மத்திய படையினர் பாரபட்சமின்றி செயல்பட்டால் எங்களுக்கு பிரச்சினை இல்லை. ஆனால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டால் அதை நாங்கள் எதிர்ப்போம்.

நந்திகிராமில் தேர்தல் மோசடியில் ஈடுபடுவதற்கு வெளியாட்களை கொண்டு முயற்சிகள் நடந்தன. இதுதான் அவர்கள் பாணி. ஆனாலும் நான் அங்கு வெற்றி பெறுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story