பா.ஜ.க.வுக்கு வாக்களித்தால் காவிமயமாகி விடும்; முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தாக்கு


பா.ஜ.க.வுக்கு வாக்களித்தால் காவிமயமாகி விடும்; முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தாக்கு
x
தினத்தந்தி 4 April 2021 2:50 AM IST (Updated: 4 April 2021 2:50 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க.வுக்கு வாக்களித்தால் காவிமயமாகி விடும் என முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தொகுதி வாரியாக முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி நெட்டப்பாக்கம் தொகுதியில் நேற்று நாராயணசாமி பிரசாரம் செய்தபோது பேசியதாவது:-

மொட்டை அடிப்பார்கள்

சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால் மக்களுக்கு யார் பாதுகாப்பு கொடுப்பார்கள் என்பது தான் முக்கியம். தற்போது பா.ஜ.க. புதிதாக வந்துள்ளது. பா.ஜ.க.வுக்கு வாக்களித்தால் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும் என புதுவைக்கு வந்த மோடி கூறுகிறார். பா.ஜ.க. ஆளும் வடமாநிலங்களில் நிலை என்ன என்பது குறித்து நமக்கு தெரியும்.

மாட்டு இறைச்சி சாப்பிட முடியாது. அதற்கு தடை விதித்து விடுவார்கள். குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகையை நிறுத்தி விட்டார்கள். அனைத்தும் காவி மயமாக்கப்படும். மக்களால் சுதந்திரமாக செயல்பட முடியாது. ஜாதி கலவரத்தை தூண்டுவார்கள்.

என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அமைத்து பா.ஜ.க. நாட்டை குட்டிச் சுவராக்கிவிட்டது. மோடி ஆட்சியில் மக்களை மொட்டை அடித்து விடுவார்கள்.

அரசின் சாதனை

புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவச கல்வி திட்டம். வீடு கட்டும் திட்டத்திற்கு வழங்கப்பட்டு வந்த மானியம் ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. இந்த திட்டங்கள் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கிடையாது. இது எங்கள் அரசின் சாதனை. காங்கிரஸ் கட்சியில் அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி சென்றுவிட்டனர். ஆனால் விசுவாசமாக இருப்பவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரசாரத்தின் போது வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் அமைச்சர் கந்தசாமி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.


Next Story