மண்டியாவில், தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீவைப்பு; மகன், நண்பர் உடல் கருகி சாவு
மண்டியா அருகே தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்த பயங்கரம் நடந்துள்ளது. இதில் பெயிண்டரின் மகன், நண்பர் உடல் கருகி செத்தனர். மேலும் பெயிண்டர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மண்டியா: மண்டியா அருகே தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்த பயங்கரம் நடந்துள்ளது. இதில் பெயிண்டரின் மகன், நண்பர் உடல் கருகி செத்தனர். மேலும் பெயிண்டர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மனைவியை பிரிந்து வாழ்ந்த பெயிண்டர்
சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே டவுனை சேர்ந்தவர் பாரத் (வயது 34). இவருக்கு திருமணம் ஆகி மனைவி, 4 வயதில் தன்வித் என்ற மகன் உண்டு. திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. பாரத் தனது மகனை அழைத்துக்கொண்டு மண்டியா மாவட்டம் நாகமங்களா தாலுகா அகசஹள்ளி கிராமத்தில் வாடகை வீட்டில் குடியேறினார். மேலும் அவர் பெயிண்டிங் வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பாரத்தை பார்க்க அவரது நண்பர் தீபக் (33) என்பவர் வீட்டுக்கு வந்துள்ளார். இரவில் பாரத், தனது நண்பர் தீபக்குடன் மது குடித்துவிட்டு சாப்பிட்டுள்ளார். பின்னர் அங்கேயே தீபக்கும் படுத்து தூங்கினார்.
மகன்- நண்பர் சாவு
இதற்கிடையே நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் திடீரென்று பாரத்தின் வீட்டில் இருந்து பயங்கர அலறல் சத்தம் கேட்டது. இதை கேட்டு அக்கம்பக்கத்தினர் மற்றும் வீட்டு உரிமையாளர் ஆகியோர் அங்கு சென்றனர். அப்போது வீட்டில் தீப்பிடித்து கரும்புகை வெளியேறிய வண்ணம் இருந்தது. உடனே அவர்கள் வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
அங்கு பாரத், அவரது மகன் தன்வித், நண்பர் தீபக் ஆகியோர் உடலில் தீப்பிடித்தப்படி வலியால் அலறியடிபடி இருந்தனர்.
உடனே அக்கம்பக்கத்தினர், 3 பேரின் உடல்களில் பிடித்த தீயை அணைத்தனர். இதில் 3 பேரும் பலத்த தீக்காயமடைந்து உடல் கருகினர். பின்னர் 3 பேரும் சிகிச்சைக்காக நாகமங்களா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அதற்குள் பாரத்தின் மகன் தன்வித், நண்பர் தீபக் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பெயிண்டர் கவலைக்கிடம்
இதையடுத்து பாரத் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடலில் 90 சதவீத தீக்காயங்கள் இருப்பதாகவும், அவர் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் டாக்டர்கள் கூறியுள்ளனர். இதனால் அவர் உயிர் பிழைப்பது சாத்தியமில்லை என்றும் அஞ்சப்படுகிறது.
சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் நாகமங்களா புறநகர் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது வீட்டுக்குள் பெட்ரோல் வாசனை இருந்தது. மேலும் கதவு உட்புறமாக பூட்டப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. எனவே மதுபோதையில் பாரத், அவரது நண்பர் தீபக் ஆகியோர் தூங்கிய பிறகு மர்மநபர்கள் யாரோ வீட்டுக்குள் பெட்ரோல் ஊற்றி தீவைத்திருக்கலாம் என்றும், இதில் தீபக்கும், தன்வித்தும் உடல் கருகி பலியானதும், பாரத் தீக்காயமடைந்து உயிருக்கு போராடி வருவதும் தெரியவந்தது.
காரணம் என்ன?- போலீஸ் விசாரணை
ஆனால் என்ன காரணத்திற்காக இந்த கொலை நடந்தது என்பது தெரியவில்லை. ஒருவேளை பாரத், மனைவியை பிரிந்ததால் அவரது மனைவி குடும்பத்தை சேர்ந்த யாராவது இந்த வெறிச்செயலில் ஈடுபட்டார்களா என்பதும் தெரியவில்லை.
இதுகுறித்து நாகமங்களா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story