கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளில் மாற்றம் செய்ய முடியாது; சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேட்டி


மந்திரி சுதாகர்
x
மந்திரி சுதாகர்
தினத்தந்தி 4 April 2021 3:27 AM IST (Updated: 4 April 2021 3:27 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் தேவையாக உள்ளது. இதனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளில் மாற்றம் செய்ய முடியாது என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு: கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் தேவையாக உள்ளது. இதனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளில் மாற்றம் செய்ய முடியாது என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.

50 சதவீத இருக்கைகள்

பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரமாக தலைநகர் பெங்களூருவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெங்களூரு மாநகராட்சியும், அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக மராட்டியம், கேரளா உள்பட 4 மாநிலங்களில் இருந்து பெங்களூருவுக்கு வருபவர்கள் கொரோனா பரிசோதனை அறிக்கை வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் நேற்று முன்தினம் பெங்களூரு, பெங்களூரு புறநகர், கலபுரகி உள்பட 8 மாவட்டங்களில் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கை மட்டுமே பயன்படுத்த வேண்டும், நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடங்கள் திறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளன. ஓட்டல்கள், மதுபான விடுதிகளில் 50 சதவீதம் பேரை மட்டுமே அனுமதிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவுக்கு கன்னட திரையுலகினர், ஓட்டல் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசு தனது உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து பெங்களூருவில் நேற்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் நிருபர்களிடம் கூறியதாவது;-

கொரோனா பரவல் அதிகரிப்பு

கர்நாடகத்தில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதற்கு முன்பு கொரோனா பரவலை கட்டுக்குள் வைத்திருந்த முதல் மாநிலம் கர்நாடகம் என்ற பெயர் கிடைத்திருந்தது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் பிறப்பிக்கப்பட்டு இருந்த அனைத்து கட்டுப்பாடுகளிலும் தளர்வு செய்யப்பட்டு, மக்கள் எப்போதும் போல தங்களது பணிகளில் ஈடுபட அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள். தற்போது தினமும் 5 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

நேற்று (அதாவது நேற்று முன்தினம்) ஒரே நாளில் பெங்களூருவில் 3 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது 5 ஆயிரம் பேருக்கு தினமும் கொரோனா பாதிப்பு ஏற்படுவதால், அதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு நிபுணர்கள் சில பரிந்துரைகளை அரசுக்கு வழங்கி இருந்தார்கள். அவற்றில் ஜூன் மாதம் வரை கொரோனா பரவல் இருப்பதால், அதனை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

அவசரகதியில் எடுக்கப்பட்டது அல்ல

நிபுணர்களின் பரிந்துரைகளை மந்திரிகள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியே, கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக சில வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. நிபுணர்களின் பரிந்துரைகள் குறித்து முதல்-மந்திரி எடியூரப்பாவுடன் ஆலோசித்து, அவரது வழிகாட்டுதல்களின் படியே கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தி உள்ளது. இது வருகிற 20-ந் தேதி வரையே அமலில் இருக்கும். அதற்குள் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தால், வழிகாட்டுதல் நெறிமுறைகளில் மாற்றம் செய்யப்படும். மேலும் கட்டுப்பாடுகளில் தளர்வு செய்யப்படும்.

இந்த வழிகாட்டுதல் நெறிமுறைகள் அவசரகதியில் எடுக்கப்பட்டது அல்ல. நிபுணர்கள் மாநிலத்தில் கொரோனா பரவல் குறித்து ஆய்வு செய்து, அவர்கள் அரசுக்கு அளித்த பரிந்துரைகளை தான், மக்களுக்கு வழிகாட்டுதல்களாக வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் தேவையாக உள்ளது. முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான அரசு எந்தவொரு பணிகளுக்கும் தடை விதிக்கவில்லை. கொரோனா பரவாமல் தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.

மாற்றம் செய்ய முடியாது

கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதை தவிர அரசுக்கும் வேறு வழி தெரியவில்லை. கொரோனா பரவல் குறித்து மக்களுக்கு தொடர்ந்து அரசு எச்சரிக்கை விடுத்து கொண்டே தான் இருந்தது. இரவு நேர ஊரடங்கு, வார விடுமுறை நாட்களில் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. அதுதொடர்பாக அரசு சிந்திக்கவும் இல்லை. கோவில்கள், புனித தலங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Next Story