காயம் அடைந்த காலை அசைக்கும் மம்தா வீடியோவால் புதிய சர்ச்சை; பா.ஜ.க., திரிணாமுல் காங்கிரஸ் மோதல்


காயம் அடைந்த காலை அசைக்கும் மம்தா வீடியோவால் புதிய சர்ச்சை; பா.ஜ.க., திரிணாமுல் காங்கிரஸ் மோதல்
x
தினத்தந்தி 4 April 2021 7:07 AM IST (Updated: 4 April 2021 7:07 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடந்த 10-ந்தேதி நந்திகிராமில் விஷமிகளால் தள்ளிவிடப்பட்டதில் கீழே விழுந்து இடதுகால், இடுப்பு, தோள்பட்டை, கழுத்து ஆகியவற்றில் காயம் அடைந்தார்.

சிகிச்சைக்கு பின்னர் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு அவர் தீவிர தேர்தல் பிரசாரம் செய்கிறார். இந்த நிலையில் பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பிரணாய் ராய் 30 வினாடிகள் ஓடுகிற வீடியோ காட்சித்தொகுப்பு ஒன்றை தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் வெளியிட்டார். அதில் மம்தா காயம் அடைந்த காலை முன்னும் பின்னும் நகர்த்தும் காட்சி இடம்பெற்றுள்ளது. இது சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதே நேரத்தில் தேர்தலையொட்டி மக்களின் ஆதரவை பெறுவதற்காக மம்தா நாடகமாடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அந்த வீடியோவை வெளியிட்டு பிரணாய் ராய் தெரிவித்த கருத்து சர்ச்சையையும், மோதலையும் ஏற்படுத்தி உள்ளது.

பா.ஜ.க. மூத்த தலைவர் ராகுல் சின்கா, “மம்தாவின் கால்கட்டு, அவரது கட்சிக்கு ஓட்டுகளை பெற்றுத்தராது” என விமர்சித்தார்.இந்த விமர்சனங்களை திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த மாநில மந்திரி சசி பாஞ்சா கண்டித்தார். அவர், “எங்கள் அன்புக்குரிய முதல்-மந்திரியை பா.ஜ.க. அவமதிக்கும்விதம் கண்டனத்துக்கு உரியது. அவர்கள் எங்கள் முதல்-மந்திரியை மட்டும் அவமதிக்கவில்லை. மாநிலத்தில் உள்ள பெண்களையெல்லாம் அவமதிக்கின்றனர். அவர்கள் பெண்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும்” என குறிப்பிட்டார்.

பா.ஜ.க.வினரின் விமர்சனத்தை திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்காவும் சாடி உள்ளார். “மம்தாவுக்கு சிகிச்சை அளித்த புகழ் பெற்ற டாக்டர்கள் பொய் சொல்கிறார்கள் என கூற அவர்கள் முயற்சிக்கிறார்களா? இப்படிப்பட்ட பொய்களை பா.ஜ.க.வினரால் மட்டுமே கூற முடியும்” என தெரிவித்தார்.

“பா.ஜ.க.வினரின் அசிங்கமான அரசியலுக்கு வங்காள மக்கள் சரியான பதில் அளிப்பார்கள்” என திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குணால் கோஷ் குறிப்பிட்டார்.

Next Story