நந்திகிராமில் வெளிநபர்கள் என புகார்: மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டு தவறானது; தேர்தல் கமிஷன் விளக்கம்
நந்திகிராம் தொகுதியில் வெளிநபர்கள் இருப்பதாக அளிக்கப்பட்ட மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டு தவறானது என தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்துள்ளது.
வாக்குச்சாவடிக்கு சென்றார்
மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார். தனது மந்திரிசபையில் அங்கம் வகித்து வந்த சுவேந்து அதிகாரிக்கு எதிராக அவர் களமிறங்கியுள்ளதால் இந்த தொகுதி தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.இந்த தொகுதியில் கடந்த 1-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. அப்போது சில வாக்குச்சாவடிகளை மம்தா பானர்ஜி பார்வையிட்டார். அதன்படி போயல் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு சக்கர நாற்காலியில் சென்ற அவர் அங்கேயே சுமார் 2 மணி நேரம் அமர்ந்திருந்தார்.
தேர்தல் கமிஷனில் புகார்
அப்போது இரு பிரிவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இருதரப்பும் ஒருவருக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். அப்போது அங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவப்படையினர் மம்தா பானர்ஜியை அங்கிருந்து அனுப்பி விட்டு அமைதியை ஏற்படுத்தினர்.பின்னர் இது தொடர்பாக தேர்தல் கமிஷனில் மம்தா புகார் அளித்தார். நந்திகிராம் தொகுதியில் வெளிநபர்கள் குழப்பத்தை விளைவிப்பதாகவும், அங்கு வாக்குப்பதிவில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.ஆனால் மம்தாவின் இந்த புகார் மனுவில் குறிப்பிட்டிருந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை என்று தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. மம்தாவின் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தேர்தல் கமிஷன் விளக்கமாக பதிலளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு
போயல் வாக்குச்சாவடியில் நீங்கள் (மம்தா) இருப்பதை பற்றிய டஜன் கணக்கான ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகள் கிடைத்துள்ளன. அதில் மேற்கு வங்காள அரசு அதிகாரிகள், துணை ராணுவம் பின்னர் தேர்தல் கமிஷன் போன்றவர்கள் மீது நீங்கள் குற்றச்சாட்டுகளை வைக்கிறீர்கள்.தேர்தல் பார்வையாளர்கள் உள்ளிட்டவர்கள் மூலம் களத்தில் இருந்து கிடைத்த அறிக்கைகளின்படி, உங்கள் கையால் எழுதப்பட்ட குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையில் தவறானவை, எந்தவொரு ஆதாரமோ, அர்த்தமோ இல்லாதவை என்பது தெளிவாகத் தெரிகிறது.
வருத்தத்துக்குரிய விஷயம்
மாநிலத்தின் முதல்வராக இருக்கும் ஒரு வேட்பாளர் வாக்காளர்களை தவறாக வழிநடத்த முயன்றது, பின்னர் ஒரு ஊடகக் கதை எழுத முயன்றது போன்றவை ஆழ்ந்த வருத்தத்திற்குரிய விஷயம் ஆகும்.எல்லாவற்றுக்கும் மேலாக தேர்தல் நடைமுறை நடந்து கொண்டிருக்கும்போது இத்தகைய செயல்முறை தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இதைவிட பெரிய தவறான செயல் இருந்திருக்க முடியாது
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
ஐ.பி.எஸ். அதிகாரிகள் நீக்கம்
இதற்கிடையே மேற்கு வங்காளத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) 3-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், அங்கு முக்கியமான மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் 3 பேரை தேர்தல் பணிகளில் இருந்து தேர்தல் கமிஷன் நீக்கியுள்ளது. குறிப்பாக தெற்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தின் டைமண்ட் ஹார்பரில் பணியாற்றி வந்த துணை போலீஸ் கமிஷனர் மிதுன் தேய் உள்பட 3 அதிகாரிகள் மாற்றப்பட்டு உள்ளனர்.இதற்கும் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story