சிராடி மலைப்பாதையில் உலா வந்த காட்டு யானை
சிராடி மலைப்பாதையில் காட்டு யானை ஒன்று உலா வந்தது. இதனால் அந்த சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஹாசன்: சிராடி மலைப்பாதையில் காட்டு யானை ஒன்று உலா வந்தது. இதனால் அந்த சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காட்டு யானை உலா வந்தது
ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா தாலுகா மாரனஹள்ளி பகுதியில் சிராடி மலை அமைந்துள்ளது. இந்த மலையில் பெங்களூரு-மங்களூருவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. மங்களூரு-பெங்களூருவை இணைக்கும் முக்கிய சாலையாக சிராடி மலைப்பாதை உள்ளது. இந்த சாலையில் அடிக்கடி வனவிலங்குகள் நடமாடி வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பயத்துடனேயே வாகனங்களை ஓட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சிராடி மலைப்பாதையில் காட்டு யானை ஒன்று உலா வந்தது. அந்த யானை சிராடி மலைப்பாதையும் அங்கும், இங்குமாக சென்றது. அந்த யானையை பார்த்ததும் இரு புறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. ஆனால் அந்த யானை வாகன ஓட்டிகளை எந்த தொந்தரவும் செய்யாமல் சிறிது நேரம் அங்கு சுற்றிவிட்டு வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.
போக்குவரத்து பாதிப்பு
காட்டு யானையை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள், அது சென்றதும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதனால் சிராடி மலைப்பாதையில் இருப்புறமும் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன. இதன்காரணமாக அங்கு சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றி அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சீர் செய்தனர். காட்டு யானை சிராடி மலைப்பாதையில் உலா வந்ததை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Related Tags :
Next Story