ஹனிடிராப்பில் நான் சிக்கவில்லை; முன்னாள் மந்திரி டி.சுதாகர் பேட்டி
இளம்பெண்ணுக்கு பணம் கொடுத்ததாக வரும் தகவல் உண்மை இல்லை என்றும், ஹனிடிராப்பில் தான் சிக்கவில்லை என்றும் முன்னாள் மந்திரி டி.சுதாகர் தெரிவித்துள்ளார்.
சித்ரதுர்கா: இளம்பெண்ணுக்கு பணம் கொடுத்ததாக வரும் தகவல் உண்மை இல்லை என்றும், ஹனிடிராப்பில் தான் சிக்கவில்லை என்றும் முன்னாள் மந்திரி டி.சுதாகர் தெரிவித்துள்ளார்.
சித்ரதுர்கா மாவட்டம் இரியூரில் உள்ள தனது வீட்டில் நேற்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி டி.சுதாகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது;-
பணம் அனுப்பவில்லை
ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கி உள்ள இளம்பெண்ணுடன், நான் பலமுறை தொடா்பு கொண்டு பேசி இருப்பதாகவும், அவருக்கு பணம் அனுப்பி வைத்திருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. இதை கேட்டு எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
இந்த விவகாரத்தில் இளம்பெண்ணுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளேன். மந்திரியாகவும் பதவி வகித்துள்ளேன். மக்கள் பிரதிநிதியாக இருந்தவன் என்பதால், என்னிடம் உதவி கேட்டு நூற்றுக்கணக்கானோர் பேசுகிறார்கள்.
அதுபோல், இளம்பெண்ணும் என்னுடன் பேசி இருக்கலாம். ஆனால் பத்திரிகைகளில் வருவது போன்று இளம்பெண்ணுக்கு நான் பணம் அனுப்பி வைத்திருப்பதாக வரும் தகவல்கள் உண்மை இல்லை. இளம்பெண்ணுக்கு 10 ரூபாய் கூட அனுப்பி வைக்கவில்லை. இந்த விவகாரத்தில் எனது பெயர் திடீரென்று வந்திருப்பது ஆச்சரியமும், அதிர்ச்சியும் அளிக்கிறது.
ஹனிடிராப்பில் சிக்கவில்லை
சிறப்பு விசாரணை குழு போலீசார், இதுவரை விசாரணைக்கு ஆஜராகும்படி எனக்கு எந்த நோட்டீசும் அனுப்பி வைக்கவில்லை. அவ்வாறு அனுப்பினால் கண்டிப்பாக விசாரணைக்கு ஆஜராவேன். ஹனிடிராப் முறையில் நான் சிக்கி இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. அதுவும் உண்மை இல்லை. ஹனிடிராப் முறையில் நான் சிக்கவில்லை. அவ்வாறு ஏதாவது நடந்திருந்தால் நானே புகார் அளித்திருப்பேன். என்னை யாரும் மிரட்டவில்லை. பணம் கேட்டும் மிரட்டல்கள் வரவில்லை.
நான் டி.கே.சிவக்குமாரின் ஆதரவாளராக இருக்கட்டும், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவின் ஆதரவாளராக இருக்கட்டும், அந்த பிரச்சினையே தற்போது எழவில்லை. இளம்பெண்ணுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லாத பட்சத்தில், எனது பெயர் இந்த வழக்கில் இழுக்கப்பட்டு இருப்பது எப்படி என்றே தெரியவில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் உண்மை வெளியே வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story