“உங்கள் கடமை உணர்வுக்கு நன்றி” - ரெயில்வே ஊழியர்களுக்கு மத்திய மந்திரி பியூஷ் கோயல் கடிதம்
கொரோனா காலத்திலும் ரெயில்வே ஊழியர்கள் தங்கள் கடமை உணர்வின் காரணமாக ஓய்வின்றி உழைத்ததாக மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
மத்திய ரெயில்வே, வணிக மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல், அனைத்து ரெயில்வே ஊழியர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
“கொரோனா காரணமாக உலகமே உறைந்து நின்றபோதும் ரெயில்வே ஊழியர்களாக நீங்கள் ஓய்வின்றி உழைத்தீர்கள். இந்த கடமை உணர்வின் காரணமாக நிலக்கரி, உரம், உணவு தானியங்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களை நாடெங்கும் தங்கு தடையின்றி கொண்டு செல்ல முடிந்தது. கொரோனாவுக்கு எதிராக நீங்கள் ஒருங்கிணைந்து போராடியதை இந்த நாடு என்றென்றும் நன்றியுடன் நினைவுகொள்ளும்.
4,621 உழைப்பாளர் சிறப்பு ரெயில்களின் மூலம் பல்வேறு இடங்களில் சிக்கித்தவித்த 63 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களது குடும்பங்களுடன் இணைக்கப்பட்டுள்ளனர். இந்த ரெயில்கள் மூலம் விவசாயிகள் அறுவடை செய்த பொருட்கள் நாடெங்கிலும் சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
உங்களது கடமை உணர்ச்சி மற்றும் சிறந்த முயற்சிகளுக்கு நன்றி கூறும் இத்தருணத்தில் இத்தகு கடமை உணர்வு ஈடுபாடு கொண்ட ஊழியர்கள் காரணமாக, நாம் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை முறியடிப்பதுடன், மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கி, இந்திய பொருளாதாரம் மேலும் மேம்பட நாம் பெரும் பங்காற்றுவோம்”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story