நீலகிரி கலெக்டரை மாற்ற அனுமதி கோரிய தமிழக அரசின் மனு தள்ளுபடி; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவை மாற்ற அனுமதி கோரிய தமிழக அரசின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
யானைகள் வழித்தடம்
நீலகிரி மாவட்டம், முதுமலை சரணாலயத்தை ஒட்டியுள்ள மசினகுடி கிராமத்தில் யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்து விடுதி, உணவகங்கள் உள்ளிட்டவை கட்டுவதற்கு சென்னை ஐகோர்ட்டு கடந்த 2011-ம் ஆண்டு தடை விதித்தது. மேலும், யானை வழித்தடம் என வரையறுக்கப்பட்ட பகுதிகளில் இருந்து விவசாய நில உரிமையாளர்கள், விடுதி உரிமையாளர்கள் தங்கள் குடியிருப்புகளை காலி செய்து, மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. யானைகள் வழித்தடத்தை அறிவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என்றும் தெரிவித்தது. இந்த உத்தரவை எதிர்த்து பாதிக்கப்பட்டோர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீடு மனுக்களை, யானைகள் வழித்தடம் தொடர்பாக ரங்கராஜன் தாக்கல் செய்த மனுவுடன் இணைத்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் எஸ்.அப்துல் நசீர், சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இதனிடையே, இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உதவ நியமிக்கப்பட்டுள்ள வக்கீல் ஏ.டி.என்.ராவ் கடந்த 2018, நவம்பர் 28-ந் தேதி ஆஜராகி, நீலகிரி மாவட்ட கலெக்டரை இடமாற்றம் செய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்தார். இதை பரிசீலித்த நீதிபதிகள் பொதுநலன் கருதி, இந்த வழக்கில் நீலகிரி மாவட்ட கலெக்டர் உதவி தேவைப்படுவதால் அவரை சுப்ரீம் கோர்ட்டின் அனுமதியின்றி இடமாற்றம் செய்யக் கூடாது என உத்தரவிட்டனர்.
விசாரணை குழு அறிக்கைஇந்தநிலையில், தமிழக அரசின் சார்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 14-ந் தேதி திருத்தம் கோரும் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழகத்தில் ஏப்ரல் மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த, 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட தற்போது பொறுப்பிலுள்ள அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டியுள்ளது. இருப்பினும், யானைகள் வழித் தடம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2020, அக்டோபர் 14-ந் தேதி தீர்ப்பளித்துவிட்டது. எனவே நீலகிரி மாவட்ட கலெக்டரை பணியிட மாற்றம் செய்வது தேவையானதாகவும், நியாயமானதாகவும் உள்ளது. தேர்தல் ஆணைய உத்தரவு பின்பற்றும் வகையில் நீலகிரி மாவட்ட கலெக்டரை பணியிட மாற்றம் செய்ய தமிழக அரசுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அப்துல் நாசர் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது நீதிபதிகள், விசாரணை குழு அறிக்கை அளிக்கும் 6 மாதம் வரை காத்திருக்க வேண்டும் என தெரிவித்ததுடன், மனுவை திரும்பப் பெற அனுமதியளித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.