இஸ்ரோ வழக்கு அடுத்த வாரம் விசாரணை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
இஸ்ரோ வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
திரவ எரிபொருளை பயன்படுத்தி ராக்கெட்டை வடிவமைத்த குழுவில் இடம ்பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் பணத்துக்காக ராக்கெட் ரகசியங்களை விற்றதாக 1994-ல் கைது செய்யப்பட்டார். சி.பி.ஐ. விசாரணையில் அவர் குற்றமற்றவர் என்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து தம்மை கைது செய்த போலீஸ் உயர் அதிகாரிகள் சி.பி.மேத்யூ, கே.கே. ஜோஷ்வா மற்றும் எஸ்.விஜயன் ஆகியோர் மீது நம்பி நாராயணன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.
அதை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு கடந்த 2018-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. அதில், தவறிழைத்த கேரள போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையில் விசாரணை கமிட்டி அமைப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே டி.கே.ஜெயின் கமிட்டி அதன் விசாரணை அறிக்கையை சீலிட்ட உறையில் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த வாரம் தாக்கல் செய்தது.
இந்நிலையில் அந்த அறிக்கை தாக்கல் குறித்தும், விரைந்து விசாரிக்கக் கோரியும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நேற்று முறையிட்டார். அப்போது தலைமை நீதிபதி போப்டே, இந்த விவகாரம் முக்கியமானது என்றாலும், அவசரமாக விசாரிக்க வேண்டிய வழக்கு இல்லை. எனவே அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தார்.
Related Tags :
Next Story