சி.பி.ஐ.க்கு இடைக்கால இயக்குனர் ஏற்பாடு தொடர முடியாது; சுப்ரீம் கோர்ட்டு கருத்து


சி.பி.ஐ.க்கு இடைக்கால இயக்குனர் ஏற்பாடு தொடர முடியாது; சுப்ரீம் கோர்ட்டு கருத்து
x
தினத்தந்தி 6 April 2021 2:42 AM IST (Updated: 6 April 2021 2:42 AM IST)
t-max-icont-min-icon

சி.பி.ஐ.க்கு இடைக்கால இயக்குனர் ஏற்பாடு தொடர முடியாது என கருத்து தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட்டு, சி.பி.ஐ. இயக்குனரை நியமிக்கும் குழு கூட்டத்தை மே 2-ந் தேதிக்கு முன் நடத்துமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

ரிட் மனு தாக்கல்

சுப்ரீம் கோர்ட்டில் மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண் தாக்கல் செய்த ரிட் மனுவில், சி.பி.ஐ. இயக்குனராக இருந்த ஆர்.கே.சுக்லா பதவிக்காலம் முடிவடைந்ததை ஒட்டி, பிரவீண் சின்கா இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். சி.பி.ஐ. இயக்குனர் நியமனத்தை பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆகியோர் கொண்ட நியமன குழு சட்டப்படி செய்ய வேண்டும். எதிர்காலத்தில், சி.பி.ஐ. இயக்குனர் ஓய்வு பெறும் முன்னரே அடுத்த இயக்குனர் தேர்வு நடைபெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

சட்டத்தில் இடமில்லை

இந்த ரிட் மனுவை நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த மார்ச் 13-ந் தேதி மனுவை பரிசீலித்த நீதிபதிகள், 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். இந்த நிலையில் இவ்வழக்கு விசாரணை நேற்று மீண்டும் நடைபெற்றது. அப்போது வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆஜராகி, சி.பி.ஐ.க்கு பொறுப்பு இயக்குனரை நியமிக்க சட்டத்தில் இடமில்லை. நிரந்தர இயக்குனர் இல்லாததால், சி.பி.ஐ. செயல் பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என வாதிட்டார். அப்போது நீதிபதிகள், சி.பி.ஐ.க்கு இடைக்கால இயக்குனர் ஏற்பாடு தொடர முடியாது. வக்கீல் பிரசாந்த் பூஷண் தெரிவிக்கும் கருத்தை கவனத்தில்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.

அட்டர்னி ஜெனரல்

அதைத் தொடர்ந்து மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், சி.பி.ஐ.யின் இடைக்கால இயக்குனராக உயர் அதிகாரியே நியமிக்கப்பட்டுள்ளார். 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே ஏப்ரல் 23-ந் தேதி ஓய்வு பெறுகிறார். இதுபோன்ற காரணங்களால் சி.பி.ஐ. இயக்குனரை தேர்வு செய்யும், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய அதிகாரமளிக்கப்பட்ட உயர்நிலைக் குழு கூட்டம் மே 2-ந் தேதி வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது என வாதிட்டார்.

தள்ளிவைப்பு

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இது தொடர்பான வழக்கு விசாரணையை ஏப்ரல் 16-ந் தேதிக்குத் தள்ளி வைத்தனர். இதுபோல, அமலாக்கத்துறை இயக்குனர் நியமனத்தை நியாயமாகவும், வெளிப்படையாகவும் செய்திட உத்தரவிடக் கோரிய பொதுநல மனு மீதான விசாரணையும் ஏப்ரல் 9-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

 


Next Story