எதிர்காலத்தில் டெல்லியிலும் வெல்வேன்; மேற்கு வங்காளத்தில் ஒற்றைக்கால் கொண்டே வெற்றி பெறுவேன்; மம்தா பானர்ஜி நம்பிக்கை


எதிர்காலத்தில் டெல்லியிலும் வெல்வேன்; மேற்கு வங்காளத்தில் ஒற்றைக்கால் கொண்டே வெற்றி பெறுவேன்; மம்தா பானர்ஜி நம்பிக்கை
x
தினத்தந்தி 6 April 2021 3:18 AM IST (Updated: 6 April 2021 3:18 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காளத்தில் ஒற்றைக்காலிலேயே வெற்றி பெறுவேன் என மம்தா பானர்ஜி நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

3-ம் கட்ட வாக்குப்பதிவு
மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் 2 கட்ட வாக்குப்பதிவு முடிந்து இன்று (செவ்வாய்க்கிழமை) 3-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாநிலத்தில் இந்த தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இடையே நேரடி போட்டி ஏற்பட்டு உள்ளது.எனவே ஆட்சியை தக்க வைக்க ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி மிகுந்த போராட்டம் நடத்தி வருகிறார். எனினும் தான் மீண்டும் மாநிலத்தில் வெற்றி பெறுவேன் என உறுதிபட தெரிவித்து உள்ளார்.

ஹூக்ளியில் பிரசாரம்
ஹூக்ளி மாவட்டத்தில் நேற்று நடந்த பிரசார கூட்டம் ஒன்றில் உரையாற்றிய மம்தா, தனது காலில் காயம் ஏற்பட்ட நிலையிலும் இந்த தேர்தலில் வெற்றி பெறுவேன் என நம்பிக்கை வெளியிட்டார்.

பிரசாரத்தின்போது அவர் கூறியதாவது:-

உள்ளூர் தலைவர்கள் இல்லை
மேற்கு வங்காள தேர்தலில் நிறுத்துவதற்கு பா.ஜனதாவினரிடம் உள்ளூர் தலைவர்கள் இல்லை. அவர்களது வேட்பாளர்கள் அனைவரும் திரிணாமுல் காங்கிரஸ் அல்லது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரிடம் இருந்து வாங்கப்பட்டவர்களே.சோனார் பங்களாவை (பொன்னான வங்காளம் - பா.ஜனதாவினரின் கோஷம்) சரியாக கூற தெரியாதவர்களால் வங்காளத்தை ஆள முடியாது.

விலைக்கு வாங்கி விடுவார்கள்
மேற்கு வங்காள தேர்தலில் ஒற்றைக்காலிலேயே வெற்றி பெறுவேன். எதிர்காலத்தில் இரு கால்கள் கொண்டு டெல்லியிலும் வெல்வேன்.இந்த தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் நான் வெற்றி பெறுவேன். ஆனால் இந்த தேர்தல் என்னை பற்றியது மட்டுமல்ல, மாறாக திரிணாமுல் காங்கிரஸ் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவதற்கான உறுதியை நீங்கள் அளிக்க வேண்டும். இல்லையென்றால் பா.ஜனதா தங்கள் பணபலத்தை வைத்து துரோகிகளை விலைக்கு வாங்கிவிடுவார்கள்.

இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

8 கட்ட தேர்தலுக்கு எதிர்ப்பு
நாடு முழுவதும் கொரோனா அலை வேகமெடுத்து வரும் நிலையில், மாநிலத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுவதை மம்தா பானர்ஜி சாடினார்.இதுகுறித்து அவர் கூறும்போது, ‘மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடத்துவதற்கான அவசியம் என்ன? இது பா.ஜனதாவினரின் செயலாகும். கொரோனா பரவி வரும் இந்த சூழலில் குறுகிய காலத்துக்குள் தேர்தலை நடத்தி முடித்திருக்கக்கூடாதா?’ என்று கேள்வி எழுப்பினார்.

Next Story