அனில் தேஷ்முக் பதவி விலகியதை அடுத்து மராட்டிய புதிய உள்துறை மந்திரி திலீப் வல்சே பாட்டீல்
மந்திரி பதவியில் அனில் தேஷ்முக் பதவி விலகியதை அடுத்து அவர் பொறுப்பு வகித்து வந்த உள்துறை திலீப் வல்சே பாட்டீலுக்கு ஒதுக்கப்பட்டது.
பதவி விலகிய மந்திரி
மாதந்தோறும் ரூ.100 கோடி மாமூல் கேட்டு போலீசாரை கட்டாயப்படுத்தியது உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்பான புகார்களில் உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அனில் தேஷ்முக் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை கவர்னர் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து உள்துறை மந்திரி பதவிக்கு தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் திலீப் வல்சே பாட்டீலை நியமிக்க வேண்டும் என்று கவர்னருக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பரிந்துரை செய்தார். இதனையும் கவர்னர் ஏற்று உத்தரவிட்டார்.
இலாகா மாற்றம்திலீப் வல்சே பாட்டீல் இதுவரை தொழிலாளர் மற்றும் கலால் வரித்துறை மந்திரியாக பதவி வகித்து வந்தார். அவருக்கு உள்துறை ஒதுக்கப்பட்டு இருப்பதால், அவர் கவனித்து வந்த தொழிலாளர் நலத்துறை, ஊரக வளர்ச்சி துறை மந்திரி ஹசன் முஷ்ரிப்புக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டு உள்ளது. இதேபோல கலால் துறை துணை முதல்-மந்திரி அஜித்பவார் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.