மக்கள் உங்கள் மீது வைத்த நம்பிக்கையை உடைத்துவிட்டீர்கள் - மம்தா பானர்ஜியை விமர்சித்த பிரதமர் மோடி
உங்கள் மீது மக்கள் வைத்த நம்பிக்கையை உடைத்துவிட்டீர்கள் என்று மம்தா பானர்ஜியை பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார்.
கொல்கத்தா,
294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில் இன்று 3-ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.
எஞ்சிய 5 கட்டங்களுக்கு முறையே ஏப்ரல் 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2 ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக-வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேவேளை இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. அடுத்தகட்ட தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மேற்குவங்காளத்தின் ஹவ்ரா மாவட்டத்தில் பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்றார்.
பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசார நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது,
மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பூத் ஏஜெண்டுகள் கூட கிடைக்கவில்லை. சில நாட்களுக்கு முன்னர் தனது கட்சி பூத் ஏஜெண்டுகளை தேர்தல் ஆணையமும், பாதுகாப்புப்படையினரும் தடுத்து நிறுத்தியதாக மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டினார். தற்போது அவரது கட்சி பூத் ஏஜெண்டுகளே அவருக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடுவதை மம்தா ஒப்புக்கொண்டுள்ளார்.
மேற்குவங்காளத்திற்கு மம்தா என்ன செய்தார் என்பது வெளிவரும். அதனால் தான் மேற்குவங்காள மக்களை மம்தா மிரட்டுகிறார். மக்களுக்காக சேவை செய்ய எங்களுக்கு வாய்ப்பு தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். பணத்தை பெற்றுக்கொண்டு வாக்குகளை விற்றுவிட்டதாக உங்கள் (மக்கள்) மீது மம்தா குற்றஞ்சாட்டியுள்ளார். நீங்கள் அதை செய்தீர்களா? இது உங்களை அவமதிப்பது போல் உள்ளது அல்லவா? தேர்தலில் இதற்கான பதிலடி கொடுக்க வேண்டும்.
மம்தா, மேற்குவங்காள மக்கள் உங்களை நம்பினார்கள், நீங்கள் அவர்களின் நம்பிக்கையை உடைத்துவிட்டீர்கள். மேற்குவங்காள மக்களின் இதயத்தை நீங்கள் உடைத்துவிட்டீர்கள்' என்றார்.
Related Tags :
Next Story