இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்துக்கு கீழே வந்தது, ஒரு நாள் கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1 லட்சத்துக்கு கீழே வந்தது. பலியும் சற்றே குறைந்துள்ளது.
1 லட்சத்துக்கு கீழே...
இந்தியாவில் கடந்த மாதம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் ஏறுமுகம் காணத்தொடங்கியது. அது இந்த மாதத்திலும் தொடர்ந்தது. அந்த வகையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 558 பேர் கொரோனா தாக்குதலுக்கு ஆளானார்கள்.இந்தியாவில் கொரோனா பரவத்தொடங்கிய காலகட்டம் வரை இதுதான் அதிகபட்ச ஒரு நாள் பாதிப்பு ஆகும்.
இந்த நிலையில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்துக்கு கீழே வந்திருக்கிறது. சரியாக 96 ஆயிரத்து 982 பேருக்கு புதிதாக கொரோனா தாக்கி உள்ளது. நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை சுமார் 6 ஆயிரத்து 500-க்கும் குறைவாகும்.நாட்டில் இதுவரை கொரோனா தாக்குதலுக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 26 லட்சத்து 86 ஆயிரத்து 49 ஆக அதிகரித்து இருக்கிறது.
மராட்டியம் தொடர்ந்து மோசம்மராட்டிய மாநிலத்தில் கொரோனா நிலைமை தொடர்ந்து மோசமாகவே உள்ளது. அங்கு மட்டுமே புதிதாக 47 ஆயிரத்து 288 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. சத்தீஷ்காரில் 7,302 பேருக்கு கொரோனா தாக்கி உள்ளது. கர்நாடகத்தில் பாதிப்பு 5 ஆயிரத்துக்கு மேலே சென்றுவிட்டது.கொரோனா பரவல் தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று டெல்லியில் உயர் அதிகாரிகளின் கூட்டத்தைக்கூட்டி அவசர ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, மராட்டியம், பஞ்சாப், சத்தீஷ்கார் ஆகிய 3 மாநிலங்களுக்கு சுகாதார நிபுணர்கள் அடங்கிய மத்திய குழுக்களை உடனடியாக அனுப்பிவைக்க உத்தரவிட்டது நினைவுகூரத்தக்கது.
பலியும் குறைந்தது...நேற்று முன்தினம் 478 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருந்த நிலையில், நேற்று இந்த எண்ணிக்கை 446 ஆக குறைந்தது. இதுவரை கொரோனாவால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 65 ஆயிரத்து 547 ஆக அதிகரித்து இருக்கிறது.நேற்று பலியான 446 பேரில், வழக்கம் போல மராட்டிய மாநிலத்தினரே அதிக எண்ணிக்கையை கொண்டுள்ளனர். அங்கு 155 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். பஞ்சாப்பில் 72 பேர், சத்தீஷ்காரில் 44 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கிறார்கள்.
இருந்தபோதிலும் திரிபுரா, புதுச்சேரி, ஒடிசா, நாகலாந்து, மிசோரம், மேகாலயா, மணிப்பூர், லட்சத்தீவு, லடாக், தத்ராநகர் ஹவேலி டாமன் தியு, அசாம், அருணாசலபிரதேசம், அந்தமான் நிகோபார் ஆகிய 13 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் நேற்று கொரோனா உயிரிழப்பில் இருந்து தப்பின.கொரோனா இறப்புவிகிதம், 1.30 சதவீதமாக குறைந்துள்ளது.
50,143 பேர் நலம்கொரோனா கொடுந்தொற்றில் இருந்து நேற்று ஒரே நாளில் 50 ஆயிரத்து 143 பேர் நலம் பெற்றுள்ளனர். இந்தியாவில் இதுவரையில் 1 கோடியே 17 லட்சத்து 32 ஆயிரத்து 279 பேர் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து குணம் அடைந்துள்ளனர். நேற்று நலம் பெற்றவர்களின் மராட்டிய மாநிலத்தினரே அதிகம். அங்கு 26 ஆயிரத்து 252 பேர் குணம் அடைந்து, பல்வேறு ஆஸ்பத்திரிகளில் இருந்து வீடு திரும்பி உள்ளனர்.
27-வது நாளாக ஏறுமுகம்இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றில் இருந்து மீள்வதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து 27-வது நாளாக ஏறுமுகம் கண்டுள்ளது. நேற்று இந்த எண்ணிக்கை 49 ஆயிரத்து 393 அதிகரித்தது. நேற்று காலை நிலவரப்படி இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து விடுவிக்கப்படுவதற்காக சிகிச்சை பெறுவோர் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 88 ஆயிரத்து 223 ஆக உள்ளது. இது மொத்த பாதிப்பில் 6.21 சதவீதம் ஆகும்.
முதல்-மந்திரிகளுடன் பிரதமர் ஆலோசனைகொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் வைப்பதற்கும், தடுப்பூசி திட்டத்தை விரைந்து செயல்படுத்தவதற்கும் தேவையான வழிவகைகள் குறித்து பிரதமர் மோடி நாளை (வியாழக்கிழமை) காணொலி காட்சி வழியாக மாநில முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை நடத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.