19 ஆண்டுகளுக்கு பின் தந்தையாக இருந்த வீரர் நக்சலைட்டு தாக்குதலில் பலியான சோகம்
திருமணம் நடந்து 19 ஆண்டுகளுக்கு பின் தந்தையாக இருந்த வீரர் நக்சலைட்டு தாக்குதலில் பலியான சோகம் நடந்துள்ளது.
பிஜாப்பூர்,
சத்தீஷ்காரின் நாராயண்பூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் 23ந்தேதி பாதுகாப்பு படையினர் சென்ற பேருந்து ஒன்றை சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை வைத்து நக்சலைட்டுகள் தகர்த்தனர். இதில் மாவட்ட ரிசர்வ் படையை சேர்ந்த 5 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதனை தொடர்ந்து நக்சலைட்டுகளை ஒழிக்கும் பணியில் பாதுகாப்பு வீரர்கள் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக பிஜாப்பூர் மாவட்டத்தில் சிறப்பு அதிரடி படை, மாவட்ட ரிசர்வ் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் கோப்ரா படை பிரிவை சேர்ந்த வீரர்கள் என நூற்றுக்கணக்கானோர் சில்கர் வனப்பகுதிக்கு சென்றுள்ளனர்.
இதில், வீரர்கள் மீது நக்சலைட்டுகள் மறைந்திருந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து இரு தரப்பிலும் கடுமையான துப்பாக்கி சூடு நடந்தது.
இந்த மோதலில் 5 வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர் என முதற்கட்ட தகவல் வெளியானது. 20 பேர் காயமடைந்தனர். இதேபோன்று நக்சலைட்டுகள் தரப்பில் 12 பேர் கொல்லப்பட்டனர். 15 பேர் காயமடைந்தனர். காயமடைந்த வீரர்களை மீட்க 9 ஆம்புலன்சுகள் மற்றும் இரண்டு எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர்கள் உடனடியாக சென்றன என தெரிவிக்கப்பட்டது.
இதன்பின்னர் பாதுகாப்பு படையினரில் 22 பேர் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டது. 31 பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதலில் உயிரிழந்த வீரர்களில் ஒருவர்
திருமணம் நடந்து 19 ஆண்டுகளுக்கு பின் தந்தையாக இருந்த சூழலில் நக்சலைட்டு தாக்குதலில் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது.
பிஜாப்பூரின் செர்பால் கிராம பகுதியை சேர்ந்தவர் கிஷோர் எந்திரிக். கடந்த 2002ம் ஆண்டு கிஷோருக்கும், ரிங்கி என்பவருக்கும் திருமணம் நடந்தது. 19 ஆண்டுகளுக்கு பின்னர் கிஷோர் தந்தையாக உள்ளார். அவரது மனைவி ரிங்கி 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
நக்சல்களுக்கு எதிரான தாக்குதலில் கிஷோரின் சகோதரர் ஹேமந்தும் அவர்களை எதிர்த்து போரிட்டுள்ளார். இதில், வேறு பிரிவில் இருந்த தனது சகோதரரை பாதுகாத்த கிஷோர் நக்சலைட்டுகளின் தாக்குதலில் கொல்லப்பட்டு உள்ளார்.
அவரது இறுதி சடங்குகளை சகோதரர் முன்னின்று நடத்தியுள்ளார். இதில் கிராம மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story