ரமேஷ் ஜார்கிகோளிக்கு கொரோனா பாதிப்பு விவகாரம்; மாவட்ட மருத்துவ அதிகாரி அறிக்கை அளிக்க எஸ்.ஐ.டி. போலீசார் கடிதம்


ரமேஷ் ஜார்கிகோளிக்கு கொரோனா பாதிப்பு விவகாரம்; மாவட்ட மருத்துவ அதிகாரி அறிக்கை அளிக்க எஸ்.ஐ.டி. போலீசார் கடிதம்
x
தினத்தந்தி 7 April 2021 2:57 AM IST (Updated: 7 April 2021 2:57 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளிக்கு கொரோனா பாதிப்பு விவகாரம் குறித்து அறிக்கை அளிக்கும்படி மாவட்ட மருத்துவ அதிகாரிக்கு சிறப்பு விசாரணை குழு போலீசார் கடிதம் எழுதி உள்ளனர். அவர் விசாரணைக்கு ஆஜராகாத காரணத்தால் போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பெங்களூரு:

ஆபாச வீடியோ விவகாரம்

  முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளியின் ஆபாச வீடியோ விவகாரம் குறித்து சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த இளம்பெண், பெங்களூரு மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நீதிபதி முன்னிலையில் 2 முறை ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார். இளம்பெண்ணிடம் போலீசாரும் தொடர்ந்து விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுள்ளனர்.

  இந்த வழக்கில் ஏற்கனவே முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளியிடம் போலீசார் 3 முறை விசாரணை நடத்தி இருந்தனர். ஆனால் இளம்பெண் வாக்குமூலம் அளித்த பின்பு, அதன்மூலம் கிடைத்த தகவலின் பேரில் ரமேஷ் ஜாாகிகோளியிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்திருந்தனர். இதற்காக அவருக்கு போலீசார் 2 முறை நோட்டீசும் அனுப்பி வைத்திருந்தார்கள்.

கொரோனா பாதிப்பு

  குறிப்பாக நேற்று முன்தினம் விசாரணைக்கு ஆஜராகும்படி ரமேஷ் ஜார்கிகோளிக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. மாறாக தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக பெலகாவி மாவட்டம் கோகாக் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதை டாக்டர் ரவீந்திரா உறுதிப்படுத்தி இருப்பதுடன், வீடியோவும் வெளியிட்டு இருந்தார்.

  ஆனால் ரமேஷ் ஜார்கிகோளிக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று இளம்பெண்ணின் வக்கீல், காங்கிரசார் கூறி வருகின்றனர். அதே நேரத்தில் ரமேஷ் ஜார்கிகோளி விசாரணைக்கு ஆஜராகாததால், அவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா?, அவரது உடல் நிலைமை எந்த நிலையில் உள்ளது? என்பதை அறிந்து கொள்ள சிறப்பு விசாரணை குழு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

மருத்துவ அதிகாரிக்கு கடிதம்

  இதுபற்றி பெலகாவி மாவட்ட மருத்துவ அதிகாரிக்கு போலீசார் கடிதம் எழுதி அனுப்பி வைத்துள்ளனர். அதில், ரமேஷ் ஜார்கிகோளியிடம் ஆபாச வீடியோ விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டிய இருப்பதால், அவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா?, அவரது உடல் நிலை குறித்து மருத்துவ பரிசோதனை அறிக்கை வழங்கும்படி கோரி அந்த கடிதத்தில் போலீசார் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த அறிக்கை வந்த பிறகு, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

  ஆபாச வீடியோ விவகாரத்தில் கடந்த மாதம் (மார்ச்) 30-ந் தேதியில் இருந்து நேற்று முன்தினம் வரை தொடர்ந்து 7 நாட்கள் இளம்பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றிருந்தனர். அப்போது ஆபாச வீடியோ விவகாரத்தில் மூளையாக செயல்பட்ட நரேஷ்கவுடா, ஸ்ரவன், தொழில்அதிபர் சிவக்குமார் பற்றி போலீசாருக்கு முக்கிய தகவல்கள் கிடை்ததிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

20 போலீசார் குழு

  அவர்கள் 3 பேரும் தற்போது தலைமறைவாக உள்ளனர். இளம்பெண்ணிடம் விசாரணை முடிந்திருப்பதால், தலைமறைவாக உள்ள 3 பேரையும் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி உள்ளனர். இதற்காக 20 போலீசார் அடங்கிய குழுவை போலீஸ் அதிகாரிகள் உருவாக்கி உள்ளனர். அந்த குழுவினர் தலைமறைவாக உள்ள 3 பேரையும் பிடிக்க கேரளா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

  இந்த வழக்கில் ஆபாச வீடியோ அடங்கிய ஒரிஜினல் சி.டி. போலீசாருக்கு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதற்காக நரேஷ்கவுடா, ஸ்ரவனை தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கிடையே சிறப்பு விசாரணை குழு போலீசார், கோகாக்கிற்கு சென்று ரமேஷ் ஜார்கிகோளி சிகிச்சை பெறுகிறாரா? என்று டாக்டர்களை சந்தித்து விசாரித்தனர். ரமேஷ் ஜார்கிகோளி அங்கு தான் இருக்கிறாரா? என்பதையும் உறுதி செய்தனர்.

Next Story