கர்நாடக அரசு போக்குவரத்து ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்


கர்நாடக அரசு போக்குவரத்து ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 7 April 2021 3:20 AM IST (Updated: 7 April 2021 3:20 AM IST)
t-max-icont-min-icon

சம்பள உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள் இன்று(புதன்கிழமை) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

பெங்களூரு:

கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை

  அரசு போக்குவரத்து ஊழியர்கள் தங்களுக்கு 6-வது ஊதிய குழு பரிந்துரையின்படி சம்பள உயர்வு வழங்க வேண்டும், தங்களை அரசு ஊழியர்களாக கருத வேண்டும் என்பன உள்பட 10 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து ஊழியர்கள் சங்க பிரதிநிதிகளுடன், அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.

  இதில் அரசு ஊழியர்களாக கருத வேண்டும் என்ற கோரிக்கையை தவிர மற்ற 9 கோரிக்கைகளை 3 மாதத்திற்குள் நிறைவேற்றுவதாக அரசு எழுத்துப்பூர்வமான வாக்குறுதியை அளித்தது. இதையடுத்து போக்குவரத்து ஊழியர்கள் தங்களின் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர். ஆனால் அரசு அளித்த வாக்குறுதியின்படி தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்று ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

வேலை நிறுத்தம்

  மேலும் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்பட தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 7-ந் தேதி (அதாவது இன்று) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்தனர். ஆனால் போக்குவரத்து துறையை நிர்வகித்து வரும் துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி, ஊழியர்களின் 9 கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

  மாநிலத்தில் தற்போது இடைத்தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், சம்பள உயர்வு குறித்து தற்போது முடிவை அறிவிக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார். அதனால் ஊழியர்கள் தங்களின் வேலை நிறுத்த போராட்ட முடிவை கைவிட வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால் திட்டமிட்டப்படி போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் இன்று (புதன்கிழமை) முதல் தொடங்கும் என்று அந்த ஊழியர்களின் கவுரவ தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகர் அறிவித்துள்ளார்.

ஆஜராக வேண்டும்

  இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் கர்நாடகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில் இயக்கப்படும் 25 ஆயிரம் பஸ்களின் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் 7 ஆயிரம் அரசு பஸ்கள் ஓடுகின்றன. இதில் தினமும் 30 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். இந்த பஸ்கள் இயங்காவிட்டால், வேலைக்கு செல்பவர்கள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் என பலரும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

  அதே நேரத்தில் பஸ்களை இயக்க அரசு போக்குவரத்துத்துறை, மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளது. தனியார் டிரைவர்கள் மற்றும் பயிற்சி ஓட்டுனர்களை வைத்து பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் போக்குவரத்து ஊழியர்கள் அனைவரும் இன்று கட்டாயம் பணிக்கு ஆஜராக வேண்டும் என்றும், தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து கழக அதிகாரி உத்தரவிட்டுள்ளார். அதே நேரத்தில் மெட்ரோ ரெயில்கள் வழக்கம் போல் இயங்க உள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் பெங்களூருவில் இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

சம்பள உயர்வு

  கொரோனா பரவல் காரணமாக பஸ்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. அதனால் போக்குவரத்து கழகங்கள், நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இந்த சூழ்நிலையில் போக்குவரத்து ஊழியர்களின் சம்பள உயர்வு கோரிக்கையை அரசு நிறைவேற்றுவது கடினமான ஒன்றாகும் என்று கூறப்படுகிறது.

Next Story