கொரோனா பரவல் அதிகரிப்பு: மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை


கொரோனா பரவல் அதிகரிப்பு:  மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி  நாளை ஆலோசனை
x
தினத்தந்தி 7 April 2021 8:25 AM GMT (Updated: 7 April 2021 8:25 AM GMT)

பிரதமர் மோடி, கொரோனா நிலவரம் பற்றி அனைத்து மாநில, யூனியன் பிரதேசங்களின் முதல்-மந்திரிகளுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார்

புதுடெல்லி, 

இந்தியாவில் கடந்த ஒரு மாதமாக கொரோனா வைரஸ் முழு வேகத்துடன் தாக்கி வருகிறது. இது, இரண்டாவது அலையாக கருதப்படுகிறது. குறிப்பாக மராட்டியம், பஞ்சாப், கர்நாடகா, கேரளா, சத்தீஷ்கார், சண்டிகார், குஜராத், மத்தியபிரதேசம், தமிழ்நாடு, டெல்லி, அரியானா ஆகிய 11 மாநிலங்களில் தொடா்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. 

இந்த மாநிலங்களை, ‘பெரும் கவலைக்குரிய மாநிலங்கள்’ என்று மத்திய அரசு வகைப்படுத்தி உள்ளது. குறிப்பாக இன்று  கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 15 ஆயிரமாக உள்ளது. நாட்டில் கொரோனா பரவிய காலம் முதல் ஏற்பட்ட ஒருநாள் அதிகபட்ச பாதிப்பு இதுதான் ஆகும்.  தினசரி பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளையும் மிஞ்சி இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது.

மாநிலங்களில் தொற்று அதிகரித்து வரும்நிலையில், கடந்த வாரம் மத்திய அரசு உயர்மட்ட ஆலோசனை கூட்டங்களை நடத்தியது. கடந்த 2-ந் தேதி, அனைத்து மாநிலங்களின் தலைமை செயலாளர்கள், சுகாதார செயலாளர்கள் ஆகியோருடன் மந்திரிசபை செயலாளர் ராஜீவ் கவுபா ஆலோசனை நடத்தினார்.

இதன் தொடர்ச்சியாக, பிரதமர் மோடி, கொரோனா நிலவரம் பற்றி அனைத்து மாநில, யூனியன் பிரதேசங்களின் முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். வருகிற 8-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 6.30 மணிக்கு இந்த ஆலோசனை நடக்கிறது. அப்போது, கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. புதிதாக கட்டுப்பாடுகள் விதிப்பது பற்றியும் பேசப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story