கொரோனா தொற்றால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா வீடு திரும்பினார்
கொரோனா தொற்றால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா குணமடைந்து வீடு திரும்பினார்.
ஸ்ரீநகர்,
காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லாவுக்கு (வயது 85) கொரோனா தொற்று இருப்பது கடந்த மாதம் (மார்ச்) 30-ந் தேதி உறுதியானது. இதனையடுத்து அவர் ஸ்ரீநகரில் உள்ள ஸ்கிம்ஸ் ஆஸ்பத்திரியில் கடந்த 3-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அவரது உடல்நலம் விரைவில் குணமடைய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். மேலும் காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்கா ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று டாக்டர்களிடம் சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தார்.
இந்த நிலையில் கொரோனாவில் இருந்து மீண்டதால் பரூக் அப்துல்லா நேற்று மாலை வீடு திரும்பினார். இருப்பினும் அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த தகவலை அவரது மகனும், தேசிய மாநாட்டு கட்சியின் துணைத்தலைவருமான உமர் அப்துல்லா தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார். மேலும் தனது தந்தைக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கும், அவர் நலம் பெற வாழ்த்து தெரிவித்த தலைவர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story