கொரோனாவில் இருந்து மீண்ட முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி ‘டிஸ்சார்ஜ்’


ரமேஷ் ஜார்கிகோளி
x
ரமேஷ் ஜார்கிகோளி
தினத்தந்தி 7 April 2021 9:04 PM GMT (Updated: 7 April 2021 9:04 PM GMT)

கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி கோகாக் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி நேற்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார். அவர், ஒரு வாரம் வீட்டு தனிமையில் இருக்க டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

பெங்களூரு:

ரமேஷ் ஜாா்கிகோளிக்கு நோட்டீசு

  முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி ஒரு பெண்ணுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ கடந்த மாதம் (மார்ச்) 2-ந் தேதி வெளியானது. இதனால் மந்திரி பதவியை அவர் ராஜினாமா செய்தார். இந்த விவகாரம் தொடர்பாக பெங்களூரு கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் ரமேஷ் ஜார்கிகோளி மீது கற்பழிப்பு உள்பட 6 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவாகி உள்ளது. இந்த வழக்கில் பெங்களூரு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி முன்னிலையில் 2 முறை ஆஜராகி இளம்பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.

  இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு விசாரணை குழு போலீசாரும், இளம்பெண்ணிடம் ஒருவாரம் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுள்ளனர். ரமேஷ் ஜார்கிகோளியை விசாரணைக்கு ஆஜராகும்படி சிறப்பு விசாரணை குழு போலீசார் 2 முறை நோட்டீசு அனுப்பி வைத்திருந்தனர். ஆனால் உடல் நலக்குறைவை காரணம் காட்டி அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார். கடந்த 5-ந் தேதி அவர் விசாரணைக்கு ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

டிஸ்சார்ஜ்

  ஆனால் தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கூறி பெலகாவி மாவட்டம் கோகாக் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ரமேஷ் ஜார்கிகோளிக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்தாலும், அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகவும், மூச்சு திணறல் காரணமாக அவதிப்படுவதாக அரசு ஆஸ்பத்திரி டாக்டர் உறுதிப்படுத்தினார். இதையடுத்து, நேற்று முன்தினம் ரமேஷ் ஜார்கிகோளியின் உடல் நிலை குறித்து டாக்டர்களிடம் சிறப்பு விசாரணை குழு போலீசார் கேட்டு உறுதி செய்து கொண்டனர்.

  இந்த நிலையில், ரமேஷ் ஜார்கிகோளியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் நேற்று காலையில் ஆஸ்பத்திரியில் இருந்து அவர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார். அவருக்கு 2-வது நடந்த பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரியவந்தது. ஆனாலும் கொரோனா பாதிப்புக்கு உள்ளானதால், ரமேஷ் ஜாாகிகோளி இன்னும் ஒரு வாரம் வீட்டு தனிமையில் இருக்க வேண்டும் என்று அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

ஒரு வாரம் கழித்து...

  கோகாக் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ரமேஷ் ஜார்கிகோளி பெலகாவியில் தான் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் அவர் எங்கு இருக்கிறார்? என்பது பற்றி உறுதியாக தெரியவில்லை. டாக்டர்கள் ஒருவாரம் வீட்டு தனிமையில் இருக்க அறிவுறுத்தி இருப்பதால், ஒரு வாரம் கழித்து ரமேஷ் ஜார்கிகோளி விசாரணைக்கு ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  இதுதொடர்பாக ரமேஷ் ஜார்கிகோளிக்கு மீண்டும் நோட்டீசு அனுப்ப போலீசார் முடிவு செய்திருப்பதாகவும் தெரிகிறது. ஒரு வாரம் கழித்து ரமேஷ் ஜார்கிகோளி விசாரணைக்கு ஆஜராவாரா? அல்லது போலீஸ் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க கோர்ட்டில் முன்ஜாமீன் பெறுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Next Story