அம்பானி வீட்டு அருகே வெடிகுண்டு கார் வழக்கில் முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனரிடம் என்.ஐ.ஏ. விசாரணை - வாக்குமூலம் பதிவு செய்தனர்
அம்பானி வீட்டு அருகே வெடிகுண்டு கார் நிறுத்தப்பட்ட வழக்கில் முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனரான, மாநில ஊர்க்காவல் படை டி.ஜி.பி. பரம்பீர் சிங்கிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
மும்பை,
மும்பையில் தொழில் அதிபர் முகேஷ் அம்பானி வீட்டு அருகே கடந்த பிப்ரவரி 25-ந் தேதி வெடிகுண்டு கார் மீட்கப்பட்டது. இதையடுத்து அந்த காரின் உரிமையாளரான தானேயை சேர்ந்த வியாபாரி ஹிரன் மன்சுக் கடந்த மார்ச் 5-ந் தேதி மும்ரா பகுதியில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) மும்பை குற்ற புலனாய்வு பிரிவு உதவி இன்ஸ்பெக்டர் சச்சின் வாசேயை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சச்சின் வாசே கைது நடவடிக்கையை தொடர்ந்து மராட்டிய அரசிலும் புயல் வீச தொடங்கியது. குறிப்பாக மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர் சிங், மாநில ஊர்க்காவல் படை டி.ஜி.பி.யாக இடமாற்றம் செய்யப்பட்டார். மேலும் ரூ.100 கோடி மாமூல் புகாரில் மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் ராஜினாமா செய்ய நேர்ந்தது.
ஆனால் முகேஷ் அம்பானி வீட்டு அருகே வெடிகுண்டு கார் நிறுத்தப்பட்டதன் நோக்கம், ஹிரன் மன்சுக் கொலையின் பின்னணி ஆகியவற்றில் இருக்கும் மர்மங்களை என்.ஐ.ஏ. இன்னும் வெளியிடவில்லை.
வெடிகுண்டு கார், ஹிரன் மன்சுக் கொலை சம்பவம் நடந்தபோது மும்பை போலீஸ் கமிஷனராக இருந்தவர் பரம்பீர் சிங். தற்போது ஊர்க்காவல் படை டி.ஜி.பி.யாக உள்ள அவருக்கு என்.ஐ.ஏ. சம்மன் அனுப்பியது.
அதன்படி பரம்பீர் சிங் தென்மும்பையில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் நேற்று காலை 9.30 மணிக்கு ஆஜரானார். அவரிடம் மதியம் 1.15 மணி வரை விசாரணை நடத்தினர். அவரிடம் நடத்திய விசாரணையை என்.ஐ.ஏ. அதிகாரிகள் வாக்குமூலமாக பதிவு செய்தனர். அப்போது அவரிடம் இருந்து முக்கிய தகவல்கள் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே வெடிகுண்டு கார் வழக்கில் கைதாகி இருக்கும் போலீஸ் உதவி இன்ஸ்பெக்டர் சச்சின் வாசே, போலி என்கவுன்ட்டர் வழக்கில் சஸ்பெண்டு செய்யப்பட்டு இருந்தவர் ஆவார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவர் பணியில் சேர்க்கப்பட்டார். அப்போது குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனரின் கடும் எதிர்ப்பை மீறி பரம்பீர் சிங் தான் அவரை பணியில் சேர்த்ததாகவும் தற்போதைய மும்பை போலீஸ் கமிஷனர் ஹேமந்த் நக்ராலே அரசின் உள்துறைக்கு அறிக்கை அனுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு மத்தியில் கைதான போலீஸ் அதிகாரி சச்சின் வாசேயை மேலும் 3 நாட்கள் என்.ஐ.ஏ. காவலில் ஒப்படைத்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதுதவிர பதவி இழந்த மந்திரி அனில் தேஷ்முக் மீதான ரூ.100 கோடி மாமூல் புகாரில் சச்சின் வாசேயிடம் விசாரிக்க சி.பி.ஐ. முடிவு செய்துள்ளனர். இதற்காக அவர்கள் கோர்ட்டை அணுகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story