கொரோனாவின் 2-வது அலைக்கு காரணம் என்ன? மருத்துவ நிபுணர்கள் விளக்கம்


கொரோனாவின் 2-வது அலைக்கு காரணம் என்ன? மருத்துவ நிபுணர்கள் விளக்கம்
x
தினத்தந்தி 7 April 2021 11:37 PM GMT (Updated: 7 April 2021 11:37 PM GMT)

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலைக்கு காரணம் என்ன என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவின் முதல் அலை கட்டுப்படுத்தப்பட்டது. ஒரு நாள் பாதிப்பு அதிகபட்சம் 1 லட்சத்துக்குள் இருந்தது. அது 10 ஆயிரத்துக்கு கீழே கட்டுப்படுத்தப்பட்டது.

ஆனால் இப்போது தினசரி பாதிப்பு 1 லட்சத்தை கடந்து விட்டது. அதுவும் 3 நாளில் 2 முறை 1 லட்சத்தை கடந்துள்ளது. அந்த வகையில் நேற்று 1.15 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து இருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியாவில் கொரோனா பரவலின் 2-வது அலை எழுச்சி பெற காரணம் என்ன என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

டாக்டர் கிரிதரா ஆர்.பாபு (தொற்றுநோய்த்துறை தலைவர், இந்திய பொது சுகாதார நிறுவனம்):-

கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க காரணங்கள் உண்டு. புதிய வகை கொரோனா பரவலை அரசு ஒப்புக்கொள்ளாவிட்டாலும்கூட நிச்சயமாக தொற்று பரவல் அதிகரிப்பில் அவற்றுக்கு பங்கு உண்டு. அவற்றில் சில நோய் எதிர்ப்பு தன்மைக்கு தப்பிப்பவையாகவும், முந்தைய வைரஸ்களை விட வேகமாக பரவுபவையாகவும் உள்ளன. பிரேசில் வகை கொரோனாவை பொதுவாக நோய் எதிர்ப்புச்சக்தி கண்டறிவதில்லை. இதே போன்று தென்ஆப்பிரிக்க வகையில், துணை குழுக்களும் உள்ளன. அதுவும் ஆன்டிபாடிகளால் கண்டறியப்படுவதில்லை.

இந்தியாவில் தடுப்பூசி போடுவது, எந்த அளவுக்கு வேகமாக இருக்க வேண்டும் என்று ஒருவர் எதிர்பார்த்த அளவுக்கு இப்போதைய வேகம் இல்லை. ஆபத்து உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது திருப்திகரமாக இல்லை.

பாதிப்பு ஏற்பட்டவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி குறைந்தபின்னர் மீண்டும் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இது விரிவாக ஆராயப்படவில்லை. இதன்விளைவாக நிறைய எண்ணிக்கையிலானவர்கள் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருப்பார்கள்.

சுற்றுச்சூழல் காரணங்களும், சமூக நடத்தையும் கொரோனா பரவலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பொதுக்கூட்டங்கள், திருமணம் போன்ற விழாக்களில் பங்கேற்கிறபோது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவ வாய்ப்பாகிறது.

டாக்டர் என்.கே.அரோரா (தொற்றுநோயியல் நிபுணர்):-

4 அல்லது 5 காரணிகள் ஒரே நேரத்தில் சேர்ந்து செயல்படுவதால் தொற்று பரவல் அதிகரிக்கிறது. வைரஸ் பரவல் அலைபோல வருவது இயல்பான ஒன்றுதான். கொரோனா பரவல் பற்றிய பயம், முதல் 6 மாதங்களில் இருந்த அளவுக்கு இப்போது இல்லை. குறைந்து விட்டது. பொருளாதாரம் எல்லாவற்றையும் திறந்து விட்டது. மக்கள் வெளியே வருகிறார்கள். ஆனால் கொரோனா கால நடத்தைகளில் கவனக்குறைவு உள்ளது. கூட்டம் கூடுவது அதிகரித்து இருக்கிறது. இது லேசான நோய் என்ற எண்ணமும் வந்து விட்டது. முக கவசம் அணிவது மிகவும் குறைந்து விட்டது. புதிய வகை கொரோனாவும் பரவல் அதிகரிக்க ஒரு காரணம்தான்.

பேராசிரியர் ஜெயபிரகாஷ் முலியில் (வேலூர் கிறித்தவ மருத்துவ கல்லூரி முன்னாள் முதல்வர்):-

கொரோனா பற்றிய கவலை மக்களிடம் குறைந்துள்ளது. முதலில் மக்கள் பயந்தனர். ஆனால் இப்போது அதே மக்களிடம் பயம் குறைந்து இருக்கிறது. புதிய வகை கொரோனாவால் தாக்குதல் விகிதம் அதிகரிக்கக்கூடும்.

முந்தைய பாதிப்பால் ஏற்பட்ட நோய் எதிர்ப்புச்சக்தியை புதிய வகை கொரோனா பாதிப்பதற்கான வாய்ப்பு குறைவு. அதற்கான ஆதாரம் தற்போது இல்லை.

இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

Next Story