பெற்றோர் தங்கள் கனவை நிறைவேற்றும் கருவியாக குழந்தைகளை மாற்றுகிறார்கள் - பிரதமர் மோடி குற்றச்சாட்டு


பெற்றோர் தங்கள் கனவை நிறைவேற்றும் கருவியாக குழந்தைகளை மாற்றுகிறார்கள் - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 8 April 2021 5:20 AM IST (Updated: 8 April 2021 5:20 AM IST)
t-max-icont-min-icon

பெற்றோர் தங்களது கனவுகளையும், குறிக்கோளையும் நிறைவேற்றும் கருவிகளாக குழந்தைகளை மாற்றுவதாக, மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

புதுடெல்லி,

பொதுத்தேர்வுக்கு தயாராகும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுடன் பிரதமர் மோடி ஆண்டுதோறும் கலந்துரையாடல் (பரிக்ஷா பி சார்ச்சா) நடத்தி வருகிறார். இதில் முதல் முறையாக கடந்த 2018-ம் ஆண்டு டெல்லி தல்கத்தோரோ மைதானத்தில் நேரடியாக இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

அந்த வரிசையில் இந்த ஆண்டுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கொரோனாவின் கோரம் காரணமாக இந்த ஆண்டு மெய்நிகர் முறையில் நடந்தது. இதில் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் காணொலி மூலம் பங்கேற்றனர்.

அவர்கள் மத்தியில் உரையாற்றிய மோடி, தேர்வை அச்சமின்றி எதிர்கொள்வதற்கு பல்வேறு குறிப்புகளை வழங்கினார். மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:-

நீங்கள் (மாணவர்கள்) சில நேரம் தேர்வுகளை குறித்து அதிகம் சிந்திக்கிறீர்கள். ஆனால் தேர்வுகளை கண்டு நீங்கள் அஞ்ச வேண்டாம். உங்களை மேம்படுத்திக்கொள்ளும் ஒரு பரிசோதனையாக மட்டுமே இதை பார்க்க வேண்டும்.

அத்துடன் உங்கள் நீண்ட வாழ்வின் ஒரு சிறிய கட்டமாக தேர்வுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவர் அனைத்திலும் சிறந்து விளங்க முடியாது. அதேநேரம் உங்களுக்கு கடினமாக விளங்கும் பாடங்களையும் விட்டு விடக்கூடாது.

இதுபோன்ற சிக்கலான பணிகளை நான் காலையில் மேற்கொள்வேன். எளிதான பணிகளை இரவுக்கு தள்ளி வைப்பேன். அதைப்போல நீங்களும் கடினமான பாடங்களை காலையில் படித்து முடிக்க வேண்டும்.

மாணவர்களின் உள்ளத்தில் அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என பெற்றோரையும், ஆசிரியர்களையும் கேட்டுக்கொள்கிறேன். இது அவர்களிடம் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே மாணவர்களுக்கு நேர்மறையான உத்வேகத்தை பெற்றோர் அளிக்க வேண்டும். தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு வெளிப்புற அழுத்தங்கள் இல்லாமல் இருந்தால், அவர்கள் தேர்வு குறித்த அழுத்தங்கள் இன்றி இருப்பார்கள். அத்துடன் அவர்களது தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

பெற்றோர்கள் தங்களை அறியாமலேயே தங்கள் கனவுகளையும், குறிக்கோள்களையும் நிறைவேற்றுவதற்கான கருவியாக குழந்தைகளை மாற்றுகிறார்கள். ஆனால் அது மிகப்பெரிய தவறு.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Next Story