உலக அளவில் அதிக கோடீசுவரர்கள் எண்ணிக்கையில் 3-வது இடத்தில் இந்தியா - சீனாவின் ஜாக் மாவை வீழ்த்தினார், முகேஷ் அம்பானி


உலக அளவில் அதிக கோடீசுவரர்கள் எண்ணிக்கையில் 3-வது இடத்தில் இந்தியா - சீனாவின் ஜாக் மாவை வீழ்த்தினார், முகேஷ் அம்பானி
x
தினத்தந்தி 8 April 2021 12:19 AM GMT (Updated: 8 April 2021 12:19 AM GMT)

உலக அளவில் அதிக கோடீசுவரர்கள் எண்ணிக்கையில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. சீனாவின் ஜாக் மாவை வீழ்த்தி ஆசியா கண்டத்தின் நம்பர் 1 பணக்காரர் என்ற பெயரை மீண்டும் முகேஷ் அம்பானி கைப்பற்றி உள்ளார்.

நியூயார்க், 

அமெரிக்காவை சேர்ந்த ‘போர்ப்ஸ்’ பத்திரிகை, உலக கோடீசுவரர்கள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. 35-வது ஆண்டாக இப்பட்டியலை நேற்று வெளியிட்டது.

அதில், 2 ஆயிரத்து 755 பெரும் பணக்காரர்கள் இடம்பெற்றுள்ளனர். இது, கடந்த ஆண்டை விட 660 அதிகம். இப்பட்டியலில், அமெரிக்காவை சேர்ந்த 724 பேரும், சீனாவை சேர்ந்த 698 பேரும், இந்தியாவை சேர்ந்த 140 பேரும் இடம்பெற்றுள்ளனர். அதிகமான பெரும் பணக்காரர்கள் எண்ணிக்கையில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.

உலக பெரும் பணக்காரராக அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ், தொடர்ந்து 4-வது ஆண்டாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரது சொத்து மதிப்பு 17 ஆயிரத்து 700 கோடி டாலர் (ரூ.12 லட்சத்து 74 ஆயிரத்து 400 கோடி) ஆகும். ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க், 15 ஆயிரத்து 100 கோடி டாலர் சொத்து மதிப்புடன் 2-வது இடத்தில் இருக்கிறார். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெர்னார்டு அர்னால்ட், அமெரிக்காவின் பில்கேட்ஸ், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.

இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, ஆசியா கண்டத்தின் நம்பர் 1 பணக்காரர் என்ற பெயரை மீண்டும் கைப்பற்றி உள்ளார். ஓராண்டுக்கு முன்பு, இந்த அந்தஸ்தை சீனாவை சேர்ந்த ஜாக் மா பெற்றிருந்தார்.

அவரை வீழ்த்தி முகேஷ் அம்பானி இந்த அந்தஸ்தை பெற்றுள்ளார். அவரது சொத்து மதிப்பு 8 ஆயிரத்து 450 கோடி டாலர் (ரூ.6 லட்சத்து 8 ஆயிரத்து 400 கோடி) ஆகும். உலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 10-வது இடத்தில் உள்ளார்.

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் அதானி குழும தலைவர் கவுதம் அதானி 2-வது இடத்திலும், எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனர் ஷிவ் நாடார் 3-வது இடத்திலும் உள்ளனர்.

Next Story