லடாக் மோதல் விவகாரத்தில் இந்தியா, சீனா இடையே நாளை 11-வது சுற்று பேச்சுவார்த்தை - அடுத்தகட்ட படை வாபஸ் குறித்து ஆலோசனை + "||" + 11th round of talks between India and China on Ladakh conflict tomorrow - Consultation on next phase withdrawal
லடாக் மோதல் விவகாரத்தில் இந்தியா, சீனா இடையே நாளை 11-வது சுற்று பேச்சுவார்த்தை - அடுத்தகட்ட படை வாபஸ் குறித்து ஆலோசனை
லடாக் மோதல் விவகாரத்தில் இந்தியா, சீனா இடையே நாளை (வெள்ளிக்கிழமை) 11-வது சுற்று பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட படை வாபஸ் நடவடிக்கை குறித்து ஆலோசனை நடக்கிறது.
புதுடெல்லி,
கிழக்கு லடாக்கில் இந்தியா-சீனா இடையே நடந்த மோதலை தொடர்ந்து கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து படை குவிப்பும், பதற்றமும் நீடித்து வந்தது. இந்த படைகளை திரும்பப்பெற்று அங்கு அமைதியையும், இயல்பு நிலையையும் மீண்டும் ஏற்படுத்துவது தொடர்பாக இரு நாடுகளும் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.
அவ்வாறு இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையே நடந்த 10-வது சுற்று பேச்சுவார்த்தையின் பலனாக கிழக்கு லடாக்கின் பங்கோங் சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் இரு நாடுகளும் படைகளை திரும்பப்பெற்றன. இதன் மூலம் அங்கு பதற்றம் தணிய தொடங்கியது.
இந்த நடவடிக்கைகளை இரு நாடுகளும் வரவேற்றன. குறிப்பாக பங்கோங் சோ ஏரிக்கரையில் இருந்து படைகளை திரும்பப்பெற்றதன் மூலம், அசல் எல்லைக்கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் நீண்டகாலமாக நீடித்து வரும் மீதமுள்ள பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியிருந்தது.
இதைத்தொடர்ந்து அங்கு அடுத்தகட்ட படை விலக்கலுக்கான நடவடிக்கைகளை இரு நாடுகளும் தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றன. இதற்காக தொடர்ந்து தொடர்பில் இருக்கவும், பேச்சுவார்த்தையை நடத்தவும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டிருந்தன.
அதன்படி இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளுக்கான 11-வது சுற்று பேச்சுவார்த்தை நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. கிழக்கு லடாக்கின் சுசுல் செக்டாரில் இந்திய பகுதிக்குள் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில், லேயை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வரும் 14-வது படைப்பிரிவின் கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் பி.ஜி.கே.மேனன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் இந்தியா சார்பில் பங்கேற்கிறார்கள்.
இந்த பேச்சுவார்த்தையில் இருநாட்டு அசல் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் கோக்ரா, ஹாட்ஸ்பிரிங்ஸ், தெபாங் சமவெளிப்பகுதி போன்ற இடங்களில் இருந்து படைகளை விலக்குவது குறித்து இரு தரப்பும் ஆலோசனை நடத்துவார்கள் என இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.