10, 12ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்களுக்கு கேரள முதல் மந்திரி வாழ்த்து
கேரளாவில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்களுக்கு முதல் மந்திரி பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
திருவனந்தபுரம்,
நாட்டிலேயே கொரோனா பாதிப்பு முதன்முறையாக கண்டறியப்பட்ட கேரளாவில், 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 17ந்தேதி தொடங்கி 30ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கேரளாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல்களை முன்னிட்டு தேர்வு தள்ளி வைக்கப்பட்டது.
இதற்காக கேரள அரசு தேர்தல் ஆணையத்திடம் கடந்த மார்ச்சில் வேண்டுகோள் வைத்தது. இதனை ஆணையம் ஏற்று கொண்டு ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து ஏப்ரல் 2வது வாரம் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று அந்த தேர்வு நடைபெறுகிறது.
கேரளாவில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வை லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதுகின்றனர். கேரளா தவிர்த்து வளைகுடா பகுதி மற்றும் லட்சத்தீவிலும் 9 தேர்வெழுதும் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இதனை முன்னிட்டு மாணவர்களுக்கு முதல் மந்திரி பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில், 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் தொடங்குகின்றன. கொரோனா விதிமுறைகளை அனைத்து மாணவ மாணவியர்களும் பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். அதனால், உங்களுடைய நண்பர்கள், ஆசிரியர்கள் மற்றும் குடும்பத்தினர் பாதுகாப்புடன் இருக்க முடியும்.
உங்கள் ஒவ்வொருவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். அனைவரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என தெரிவித்து உள்ளார்.
கொரோனா விதிகளை பின்பற்றி தேர்வுகள் நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். கொரோனா பாதிப்பு அறிகுறிகளுடன் உள்ள மாணவர்கள் மற்றும் கொரோனா சிகிச்சை மையத்தில் உள்ள மாணவர்கள் தனியறையில் தேர்வு எழுத வைக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story