“நோய் குறித்து அச்சம் கொள்ள வேண்டும், தடுப்பூசி குறித்து அல்ல..” - மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர்


“நோய் குறித்து அச்சம் கொள்ள வேண்டும், தடுப்பூசி குறித்து அல்ல..” - மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர்
x
தினத்தந்தி 8 April 2021 6:26 AM GMT (Updated: 8 April 2021 6:26 AM GMT)

மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இன்று கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை செலுத்திக் கொண்டார்.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின. முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

அதனை தொடர்ந்து மார்ச் 1 ஆம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதற்கடுத்ததாக ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டது.

இதனையடுத்து அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதோடு, மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சில வாரங்களுக்கு முன் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்ட பிரதமர் மோடி, தடுப்பூசியின் 2வது டோசை இன்று செலுத்தி கொண்டார்.  

அதே போல மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், சில வாரங்களுக்கு முன் டெல்லி ராம் மனோகர் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக் கொண்டார். இதனையடுத்து இன்று அவருக்கு தடுப்பூசியின் 2வது டோஸ் போடப்பட்டது.

தடுப்பூசியை செலுத்திக் கொண்டது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “நாம் நோயை குறித்து அச்சம் கொண்டிருக்க வேண்டும், ஆனால் தடுப்பூசி குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. நீங்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியான வயதுடையவர்களாக இருந்தால், இன்றே பதிவு செய்து கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார். 

Next Story