மம்தா பானர்ஜிக்கு விடைகொடுக்க மேற்குவங்காள மக்கள் தயாராகிவிட்டனர் - ஜேபி நட்டா பேச்சு


மம்தா பானர்ஜிக்கு விடைகொடுக்க மேற்குவங்காள மக்கள் தயாராகிவிட்டனர் - ஜேபி நட்டா பேச்சு
x
தினத்தந்தி 8 April 2021 5:29 PM IST (Updated: 8 April 2021 5:29 PM IST)
t-max-icont-min-icon

மம்தா பானர்ஜிக்கு விடைகொடுக்க மேற்குவங்காள மக்கள் தயாராகிவிட்டனர் என்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,  

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே 3 கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ளது. எஞ்சிய 5 கட்டங்களுக்கு முறையே ஏப்ரல் 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2- ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக-வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேவேளை இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. அடுத்தகட்ட தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதற்கிடையில், மேற்குவங்காள பாஜக மாநில தலைவர் திலீப் கோஷ் நேற்று அம்மாநிலத்தின் கோட்ச்பிஹர் பகுதியில் பிரசார நிகழ்ச்சியை முடித்து விட்டு தனது காரில் புறப்பட்டு சென்றபோது அவரது காரை குறிவைத்து மர்மநபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் திலீப் கோஷின் கார் கண்ணாடிகள் உடைந்தன. மேலும், அவரது காரை பின் தொடர்ந்து வந்துகொண்டிருந்த பாஜகவினரின் கார்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் மேற்குவங்காளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அம்மாநிலத்தின் கோட்ச்பிஹர் மாவட்டத்தில் உள்ள டின்ஹடா என்ற பகுதியில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். 

பிரசாரத்தின் போது பேசிய ஜேபி நட்டா, இங்கு கூடியுள்ள கூட்டம் மம்தா பானர்ஜிக்கு ஓய்வு கொடுக்கவும், பாஜகவுக்கு வேலை கொடுக்கவும் விரும்புகிறது. திலீப் கோஷ் மீதான தாக்குதல் துரதிஷ்டவசமானது. மம்தா பானர்ஜியின் குண்டர்கள் செய்வது இது தான். நான் கூட தாக்குதலுக்கு உள்ளானேன். இந்த கலாச்சாரத்தை மம்தா பானர்ஜி உருவாக்கியுள்ளார். 

மம்தா பானர்ஜிக்கு விடைகொடுக்க மேற்குவங்காள மக்கள் தயாராகிவிட்டனர். மேற்குவங்காளத்தில் பாஜக 200-க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றும். இங்கு திரண்டுள்ள மக்கள் அதை உறுதி செய்கின்றனர்’ என்றார்.

Next Story