கேரள முன்னாள் முதல்மந்திரி உம்மன் சாண்டிக்கு கொரோனா தொற்று உறுதி


கேரள முன்னாள் முதல்மந்திரி உம்மன் சாண்டிக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 8 April 2021 10:42 PM IST (Updated: 8 April 2021 10:42 PM IST)
t-max-icont-min-icon

கேரள முன்னாள் முதல்மந்திரி உம்மன் சாண்டிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் இன்று ஒரேநாளில் 4 ஆயிரத்து 353 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 11 லட்சத்து 48 ஆயிரத்து 947 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், 140 தொகுதிகளை கொண்ட கேரள சட்டசபைக்கு கடந்த 6-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்கு முன்பான பிரசார நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டனர். அவர்களில் பலருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், கேரள முன்னாள் முதல்மந்திரியும், அம்மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 77 வயதான உம்மன் சாண்டி சட்டசபை தேர்தலின் போது தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். காய்ச்சல் காரணமாக உம்மன் சாண்டி கடந்த இரண்டு நாட்களாக வீட்டில் தனிமைப்படுத்தியிருந்தார். ஆனால், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதியாகியுள்ளதாக அவரின் உறவினர் இன்று தெரிவித்துள்ளார். 

வைரஸ் உறுதி செய்யப்ப்பட்டுள்ள உம்மன் சாண்டி மருத்துவர்களின் ஆலோசனைப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
முன்னதாக, கேரள முதல்மந்திரி பினராயி விஜயனுக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வைரஸ் உறுதி செய்யப்பட்ட பினராயி விஜயன் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நலமுடன் உள்ளதாக குறிப்பிட்டுள்ள மருத்துவர்கள் தொடர்ந்து அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார் என்றும் தெரிவித்துள்ளனர்.

Next Story