தேசிய செய்திகள்

பெங்களூருவில் இருந்து மைசூரு வருவோருக்கு நாளை முதல் ‘கொரோனா நெகட்டிவ்’ சான்றிதழ் கட்டாயம் + "||" + New restrictions for visitors to Mysore

பெங்களூருவில் இருந்து மைசூரு வருவோருக்கு நாளை முதல் ‘கொரோனா நெகட்டிவ்’ சான்றிதழ் கட்டாயம்

பெங்களூருவில் இருந்து மைசூரு வருவோருக்கு நாளை முதல் ‘கொரோனா நெகட்டிவ்’ சான்றிதழ் கட்டாயம்
பெங்களூருவில் இருந்து மைசூருவுக்கு வருவோருக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது நாளை (சனிக்கிழமை) முதல் மைசூருவுக்கு வருவோருக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:

கொரோனா 2-வது அலை

  கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மாநில தலைநகரான பெங்களூருவில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்து வருகிறது. அதுபோல் பலி எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இதனால் கர்நாடக அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

  இதுபோல் மைசூரு மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்த மைசூரு மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே பெங்களூருவில் இருந்து மைசூருவுக்கு வர அனுமதி வழங்கப்படும் என்று மைசூரு கலெக்டர் ரோகிணி சிந்தூரி அறிவித்து உள்ளார்.

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்

  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
  மைசூரு மாவட்டத்தில் சமீபகாலமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இங்கு ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், சுற்றுலா தலங்களுக்கு வருவோர் கட்டாயம் கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் வர வேண்டும். அப்போது தான் அனுமதி வழங்கப்படும். இல்லையெனில் அனுமதி வழங்கப்படாது.

  அதுபோல் தியேட்டர்களுக்கு செல்வோரும் கட்டாயம் கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் வர வேண்டும். மேலும் பெங்களூருவில் சமீப காலமாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. எனவே முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூருவில் இருந்து மைசூருவுக்கு வருபவர்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளோம். அதன்படி பெங்களூருவில் இருந்து மைசூருவுக்கு வருவோர் கட்டாயம் கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

நாளை முதல் அமல்

  கொரோனா பரவலை தடுக்கவே இந்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளோம். இந்த நடைமுறை வருகிற 10-ந்தேதி (அதாவது நாளை) முதல் வருகிற 20-ந்தேதி வரை அமலில் இருக்கும்.

  நகர்ப்புறங்களில் பாரம்பரிய திருவிழாக்களை எளிமையாக நடத்த வேண்டும். அதுபோல் திருமண நிகழ்ச்சிகள் நடத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. திருமண மண்டபத்திற்குள் 200 பேரும், திருமண மண்டபம் வெளிப்பகுதியில் 500 பேரும் பங்கேற்கலாம். இதற்கு உதவி போலீஸ் கமிஷனரிடம் இருந்து முறையாக அனுமதி பெற வேண்டும். இதில் கட்டாயம் கொரோனா வழிகாட்டுதல்களை அனைவரும் பின்பற்ற வேண்டும்.

  மைசூருவில் கொரோனா வேகமாக அதிகரித்து வருகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும். அடிக்கடி கிருமிநாசினி அல்லது சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும். அதுபோல் மாவட்ட நிர்வாகம், அரசின் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.
  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.