மூதாட்டி உள்பட 2 பேரை கொன்று கொள்ளை


மம்தா-தேவேந்திரா
x
மம்தா-தேவேந்திரா
தினத்தந்தி 8 April 2021 9:32 PM GMT (Updated: 8 April 2021 9:32 PM GMT)

பெங்களூருவில் மூதாட்டி உள்பட 2 பேரை கொன்று நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பெங்களூரு:

வௌிநாட்டில் வேலை

  பெங்களூரு புட்டேனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஜே.பி.நகர் 7-வது கிராஸ் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் மம்தா பாசு (வயது 71). இவர் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். தனது மகன் தேவத்துடன், மம்தா வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தேவத்துக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தது. இதனால் அவர் வெளிநாட்டுக்கு சென்று விட்டார். இதன்காரணமாக மம்தா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

  இந்த நிலையில் தனியாக வசிக்கும் மம்தாவை கவனித்து கொள்வதற்காக தேவத், தனது நண்பரான ஒடிசாவை சேர்ந்த தேவேந்திரா பெஹாரா (41) என்பவரை கடந்த 25 நாட்களுக்கு முன்பு பெங்களூருவுக்கு அனுப்பி வைத்தார். தேவேந்திரா தனியார் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்ததும் வீட்டிற்கு வந்த தேவேந்திரா, மம்தாவுடன் சேர்ந்து இரவு உணவு சாப்பிட்டார். பின்னர் 2 பேரும் தங்களது அறைக்கு தூங்க சென்று விட்டனர்.

குத்திக்கொலை

  இந்த நிலையில் நள்ளிரவு 1 மணியளவில் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள், மம்தாவின் அறைக்குள் புகுந்து தங்கநகைகள், பணம் ஆகியவற்றை கொள்ளையடிக்க முயன்று உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மம்தா கூச்சல் போட்டு உள்ளார். அவரது கூச்சல் சத்தம் கேட்டு தேவேந்திரா எழுந்து வந்து உள்ளார். அப்போது மம்தா, தேவேந்திரா ஆகிய 2 பேரையும் மர்மநபர்கள் கத்தியால் சரமாரியாக குத்தி உள்ளனர். இதில் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதபமாக இறந்தனர். பின்னர் வீட்டில் இருந்த தங்கநகைகள், பணம், மடிகணினிகளை கொள்ளையடித்துவிட்டு மர்மநபர்கள் தப்பி சென்று விட்டனர்.

  இந்த நிலையில் நேற்று காலை 7 மணிக்கு வேலைக்கார பெண், மம்தா வீட்டிற்கு சென்று உள்ளார். அப்போது அறையில் மம்தாவும், தேவேந்திராவும் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து வேலைக்கார பெண் அதிர்ச்சி அடைந்தார். மேலும் சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தார். அவர்கள் புட்டேனஹள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீஸ் கமிஷனர்

  அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த், தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் ஹரீஷ் பாண்டே, புட்டேனஹள்ளி போலீசார் கொலையான 2 பேரின் உடல்களையும் பார்வையிட்டனர். பின்னர் 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது.

  ஆனால் அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதற்கிடையே வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை, கைரேகை நிபுணர்கள் பதிவு செய்து கொண்டு அவற்றை ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து புட்டேனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். மூதாட்டி உள்பட 2 பேரை கொன்று நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story