“போலீஸ் தேர்வுக்கு வயது வரம்பை அதிகரிக்காவிட்டால் எனது சாவுக்கு நீங்களே பொறுப்பு”- கர்நாடக போலீஸ் மந்திரிக்கு வாலிபர் பரபரப்பு கடிதம்


“போலீஸ் தேர்வுக்கு வயது வரம்பை அதிகரிக்காவிட்டால் எனது சாவுக்கு நீங்களே பொறுப்பு”- கர்நாடக போலீஸ் மந்திரிக்கு வாலிபர் பரபரப்பு கடிதம்
x
தினத்தந்தி 8 April 2021 9:44 PM GMT (Updated: 8 April 2021 9:44 PM GMT)

போலீஸ் காவலர் பணி வயது வரம்பை அதிகரிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் எனது சாவுக்கு நீங்களே பொறுப்பு என கூறியும் வாலிபர் ஒருவர் கர்நாடக போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மைக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு:

மந்திரிக்கு வாலிபர் கடிதம்

  தார்வார் மாவட்டம் திம்மாப்புரா கிராமத்தை சேர்ந்தவர் மைலாரா (வயது 25). இவர் போலீஸ் துறையில் பணியாற்றுவதை லட்சியமாக கொண்டு செயல்பட்டு வருகிறார்.

  இந்த நிலையில் மைலாரா கர்நாடக உள்துறை மந்திரி பசவராஜ் பொம்மை, கர்நாடக அரசு, கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. பிரவீன்சூட் ஆகியோருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
  அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

வயது வரம்பை அதிகரிக்க வேண்டும்

  தான் கர்நாடக போலீஸ் துறையில் பணியாற்ற விரும்புகிறேன். ஆனால் கர்நாடக போலீஸ் கான்ஸ்டபிள் (காவலர்) தேர்வு இன்னும் நடத்தப்படவில்லை. இதற்கு வயது வரம்பு 25 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனக்கும் இன்னும் சில மாதத்தில் 25 வயது முடிவடைய உள்ளது.

  இதனால் எனது போலீஸ் பணி கனவு, கனவாகிவிடுமோ என்ற அச்சம் உள்ளது. எனவே, கர்நாடக அரசு போலீஸ்காரர் பணிக்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும். இல்லையெனில் உடனே போலீஸ் காவலர் பணி தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்.

எனது சாவுக்கு பொறுப்பு

  இல்லையெனில் எனது சாவுக்கு நீங்களே (போலீஸ் மந்திரி, கர்நாடக போலீஸ் டி.ஜி.பி., கர்நாடக அரசு) பொறுப்பு ஏற்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே கோரிக்கையை உடனே பரிசீலிக்க வேண்டும்.
  இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

பரபரப்பு

  சமீபத்தில் தான் கர்நாடக அரசு உதவி சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதுவோரின் வயது வரம்பை அதிகரித்து உத்தரவிட்டது. எனவே, போலீஸ் காவலர் தேர்வு எழுதுவோரின் வயதை அதிகரிக்க கோரி வாலிபர் மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story